திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் மண்டல புற்றுநோய் மையம் சார்பில், மார்பக புற்றுநோயை வென்று பூரண குணமடைந்து மீண்டவர்கள் கலந்துகொண்ட நெகிழ்ச்சியான சந்திப்புக்கூட்டம் நேற்று (அக். 24) நடைபெற்றது.
நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் நடைபெற்ற இச்சந்திப்புக்கூட்டத்திற்கு மருத்துவக் கல்லூரி முதல்வர் ரேவதிபாலன் தலைமை வகித்தார். மருத்துவக் கண்காணிப்பாளர் பாலசுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். புற்றுநோய் கதிரியக்கத் துறைத் தலைவர் டாக்டர். தெய்வநாயகம், மருத்துவ சிகிச்சைப்பிரிவு துறைத்தலைவர் டாக்டர் .ஆறுமுகம், அறுவை சிகிச்சைப்பிரிவு துறைத்தலைவர் டாக்டர். பாலசுப்பிரமணியன், மேட்ரன் சுசிலா, செவிலியர் கண்காணிப்பாளர் பாலு, செவிலியர் ஆசிரியர் செல்வன் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் பங்கேற்றனர். இவர்களுடன் உதவி மருத்துவர்கள், முதுகலை மாணவர்கள் மற்றும் செவிலியர்கள் எனப் பலரும் நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இந்த கூட்டத்தில் ,மிக முக்கியமான அங்கமாக, கடந்த 10 ஆண்டுகளில் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் மார்பகப் புற்றுநோய்க்குச் சிகிச்சை பெற்று, அதிலிருந்து மீண்டு இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிய பலர் கலந்துகொண்டு தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டனர்.
புற்றுநோய் கண்டறியப்பட்டபோது ஏற்பட்ட மன உளைச்சல், சிகிச்சை முறைகள், சிகிச்சையின்போது குடும்பத்தினர் அளித்த ஆதரவு, மருத்துவர்களின் அர்ப்பணிப்பு, நம்பிக்கையுடன் நோயை எதிர்கொண்டது மற்றும் மீண்டும் ஆரோக்கியமான வாழ்க்கைக்குத் திரும்புவது எப்படி? என்பன போன்ற பல்வேறு விஷயங்களை நம்பிக்கையுடன் விளக்கினர். இவர்களின் உரை அரங்கத்தில் இருந்த புதிய நோயாளிகள், மருத்துவ மாணவர்கள் மற்றும் செவிலியர்கள் மத்தியில் தன்னம்பிக்கையை விதைத்தது.
முன்னதாக, மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு தொடர்பாக மருத்துவ மாணவர்கள் மற்றும் செவிலியர்களிடையே நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. இறுதியாக, மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.









