நெல்லை அண்ணா சாலை பலாப்பழம் கால்வாய்ப் பாலம் சீரமைப்பு: கூடுதல் நிதி ஒதுக்க மேயர் உத்தரவு

Nellai-Anna-Salai-Palapazham-Canal-Bridge-Renovation-Mayor-orders-allocation-of-additional-funds

நெல்லை மாநகரப் பகுதிகளில் கடந்த மலை வெள்ளத்தின் போது சேதமடைந்த, கொக்கிரகுளம் மற்றும் வண்ணாரப்பேட்டையை இணைக்கும் முக்கிய வழித்தடமான அண்ணா சாலையில் அமைந்துள்ள பலாப்பழம் கால்வாய்ப் பாலத்தை நிரந்தரமாக சீரமைக்க உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று மாநகராட்சி மேயர் ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

நெல்லை அண்ணா சாலையில் அமைந்துள்ள பலாப்பழம் கால்வாய், கடந்த ஆண்டு ஏற்பட்ட கனமழை மற்றும் மழை வெள்ளத்தின் காரணமாகச் சேதமடைந்தது. மாநகராட்சி நிர்வாகம் சார்பில் உடனடியாகத் தற்காலிக பாலம் அமைக்கப்பட்டு, தற்போது பொதுமக்கள் அதனை பயன்படுத்தி வருகின்றனர்ல. இந்த நிலையில், நிரந்தரப் பாலத்தை விரைந்து சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதிப் பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, நெல்லை மாநகராட்சி மேயர் ராமகிருஷ்ணன் இன்று (அக். 25) காலை மாநகராட்சி அதிகாரிகளுடன் பலாப்பழம் கால்வாய்ப் பாலப் பகுதியை நேரில் ஆய்வு செய்தார். அப்போது, அப்பகுதியில் திரண்டிருந்த பொதுமக்களிடம் பாலத்தின் சேதம் மற்றும் போக்குவரத்துத் தடையால் அவர்கள் எதிர்கொள்ளும் சிரமங்கள் குறித்துக் கேட்டறிந்தார்.

ஆய்வுக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த மேயர் ராமகிருஷ்ணன் கூறியதாவது, " இந்த பாலத்தை சீரமைக்க கூடுதல் நிதி ஒதுக்க உத்தரவிட்டுள்ளேன். நெல்லை மாநகரப் பகுதிகளில் வடகிழக்குப் பருவ மழைக்கான ஆயத்தப் பணிகள் மிகத் தீவிரமாக நடந்து வருகின்றன. மாநகராட்சி, மழைக்காலத்தை எதிர்கொள்ளத் தேவையான அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளுடன் தயார் நிலையில் இருக்கிறது. இதற்காகப் போதுமான எண்ணிக்கையிலான பணியாளர்களையும் நியமித்திருக்கிறோம். மழை வெள்ளத்தை வெளியேற்ற அதிநவீன மோட்டார் பம்புகளும் தயார் படுத்தப்பட்டு, தேவைப்படும் இடங்களில் பயன்படுத்த ஆயத்தமாக உள்ளன. பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை."

இவ்வாறு அவர் கூறினார்.