உவரி மீனவ கிராமத்தில் கடலோர பாதுகாப்பு மண்டலத்துக்குட்பட்ட பகுதியில் தமிழக சபாநாயகர் திறந்து வைத்த கட்டடம் அரசு விதிகளை மீறி ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதால் நீதிமன்ற உத்தரவுப்படி கட்டடத்தை அகற்ற காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளதால் உவரியில் பரபரப்பு.
நெல்லை மாவட்டம் உவரி கிறிஸ்தவ தேவாலயத்திற்கு அருகில் கட்டப்பட்டுள்ள திருத்தல கேண்டீனை ஆகஸ்ட் 17ஆம் தேதி தமிழக சபாநாயகர் அப்பாவு திறந்து வைத்தார். இந்த கட்டிடம் சட்டத்திற்கு புறம்பாக கட்டப்பட்டுள்ளதாகவும், கடலோர பாதுகாப்பு மண்டலத்திற்கு உட்பட்ட 500 மீட்டர் தொலைவுக்குள் கட்டப்பட்டுள்ளதாகவும் அதனை அகற்ற வேண்டும் என மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளதாலும், உத்தரவினை அமல்படுத்தும் பணியில் இன்று அதிகாலை முதல் காவல்துறையினர் உவரியில் குவிக்கப்பட்டுள்ளதாலும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டம், உவரியை சேர்ந்த அரசு என்பவர் அக்டோபர் மாதம் ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:
உவரி கடற்கரையில் கிறிஸ்தவ ஆலயத்தின் அருகே அரசுக்கு சொந்தமான கடல் தடுப்பணை, மீன் இறங்கு தளம் அமைந்துள்ளது. கடலோர கட்டுப்பாட்டு மண்டலத்துக்கு உட்பட்ட இப்பகுதியில் 500 மீட்டர் தூரத்திற்கு எந்த கட்டிடங்களும் கட்டக் கூடாது. ஆனால், விதிகளுக்கு மாறாக உவரி பங்குத்தந்தை தரப்பில் கடலோர கட்டுப்பாட்டு மண்டல பகுதியில் கேண்டீன் கட்டப்படுகிறது. இதற்காக கடற்கரையில் பைபர் படகுகளை நிறுத்த அமைக்கப்பட்டிருந்த கம்பங்களை சேதப்படுத்தியுள்ளனர்.
கேண்டீன் கட்டு மான பணியை நிறுத்துமாறு மீன்வளத்துறை உதவி இயக்குனரும், உள்ளூர் மீனவர்களும், பொதுமக்களும் கேட்டுக்கொண்டனர்.
கேண்டீன் கட்டுவதற்கு உவரியில் வேறு காலியிடங்கள் உள்ளன. இருப்பினும் தடை செய்யப்பட்ட பகுதியில் கேண்டீன் கட்டப்படுகிறது. எனவே, கேண்டீன் கட்ட தடை விதித்து, கட்டுமானத்தை அகற்றுமாறு உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார்.

இந்த மனுவை ஏற்கனவே விசாரித்த நீதிபதிகள், உவரி கடற்கரையில் கடலோர கட்டுப்பாட்டு மண்டல பகுதியில் கேண்டீன் கட்டக்கூடாது. தற்போதைய நிலையே தொடர வேண்டுமென உத்தரவிட்டு இருந்தனர்.
இந்நிலையில் இந்த மனு மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில் மனுவை விசாரித்த நீதிபதிகள் கடலோர கட்டுப்பாட்டு மண்டலத்திற்கு உட்பட்ட பகுதியில் கட்டப் பட்டு வரும் கேண்டீனை 2 வாரத்தில் அகற்ற வேண்டுமென உத்தர விட்டு மனுவை முடித்து வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து இன்று காவல்துறை அதிகாரிகள் சுமார் 300க்கும் மேற்பட்ட காவல்துறை விரைவுப்படை காவலர்கள் பாதுகாப்புடன் மீன்வளத்துறை அதிகாரிகள், வருவாய் துறை அதிகாரிகள், அரசு விதிக்கு புறம்பாக கட்டப்பட்டுள்ள திருத்தல கேன்டீன் அமைந்துள்ள கட்டடத்தை ஜேசிபி மற்றும் பொக்கலேன் எந்திரங்களுடன் அகற்றி வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.










