முதல்வர் உத்தரவின் பேரில், தமிழகம் முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளில் இன்று முதல் வார்டு சிறப்பு கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த கூட்டம் வார்டுகளின் மேம்பாடு குறித்து விவாதிக்கவும், குடிநீர், தெருவிளக்கு, வடிகால் வசதி போன்ற தேவைகளை நிறைவேற்றவும் நடத்தப்படுகின்றன.
நெல்லை மாநகராட்சியில் 55 வார்டுகளிலும் இன்று சிறப்பு கூட்டம் நடத்த அதிகாரிகள் திட்டமிட்டிருந்த நிலையில், 41 வது வார்டுக்கான சிறப்பு கூட்டம் பாளையங்கோட்டை ராமலிங்க நகர் பூங்காவில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், கூட்டம் தொடங்கி 3 மணி நேரம் ஆகியும் மாநகராட்சி அதிகாரி மட்டுமே பூங்காவில் காத்திருந்தார் . நீண்ட நேரமாக அவர் செல்போனில் அழைத்தும் கவுன்சிலர் மற்றும் வார்டு மக்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை. மூன்று மணி நேரத்திற்கு பிறகு சிறப்பு கூட்டத்திற்கு தனி நபராக வந்த 41 வது வார்டு உறுப்பினர் சங்கீதாவின் கணவர், தன் கையில் வைத்திருந்த ஆவணங்களை கோரிக்கை மனுவுடன் சேர்த்து மாநகராட்சி அதிகாரியிடம் கொடுத்தார்.

அவர் கூறுகையில், இதற்கு முன்பு மக்களின் குறைகளை கேட்பதற்காக நடந்த பகுதிசபா கூட்டத்தில் கொடுத்த வாக்குறுதிகள் ஒன்றையும் அரசு நிறைவேற்றவில்லை . மீண்டும் வார்டு மக்கள் அனைவரையும் ஒன்று திரட்டி ஏற்பாடு செய்தால் ஏமாற்றமே மிஞ்சும் . வெறும் கண்துடைப்புக்காக நடத்தப்படும் அரசின் இந்த அறிவிப்பை நாங்கள் நம்பவில்லை. அதனால் நாங்கள் இந்த கூட்டத்தை புறக்கணிக்கிறோம்' என்று ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்ல.
கூட்டத்திற்காக வாங்கி வைத்திருந்த டீ, வடைகள் வீணாகி கிடக்க, காலி இருக்கைகள் முன் அதிகாரி மட்டும் நீண்ட நேரம் காத்திருந்தார். திமுக கூட்டணி கட்சியான மதிமுக உறுப்பினரின் வார்டிலேயே கூட்டம் நடத்தாதது பல்வேறு கேள்விகளை எழுப்பியது. இதையடுத்து, திமுக கட்சியினரின் ஏற்பாட்டில் மாலை 4 மணி அளவில் 41 வது வார்டை சேர்ந்த மக்கள் சிலர் வந்து அதிகாரியிடம் மனுவை கொடுத்தனர். இதில், கலந்து கொண்ட மக்கள் கூறுகையில், "எங்கள் பகுதியில் மேல்நிலை குடிநீர் நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட வேண்டும். தெரு விளக்குகள் சரி செய்யப்பட வேண்டும் .எங்கள் பகுதிக்கு மினி பஸ் சேவை வேண்டும் என்ற கோரிக்கைகளை வைத்துள்ளோம்" என்றனர்.
இதையடுத்து, கூட்டத்தை நடத்த வந்த அதிகாரி சற்று நிம்மதியடைந்து மதிய உணவை பூங்காவில் அமர்ந்தே சாப்பிட்டு விட்டு வீடு நோக்கி புறப்பட்டார்.








