பசும்பொன்னில் சேர்ந்த 3 பேர்: நெல்லைக்கு படையெடுத்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்

former-aiadmk-ministers-meets-nainar-nagnedran-in-nellai

திருநெல்வேலி பாஜக மாவட்ட அலுவலகத்தில் இன்று (அக் . 30)மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறியதாவது, ' இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேல் பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகிறோம் .உள்துறை அமைச்சர் அமித்ஷா இந்தியாவின் இரண்டாவது இரும்பு மனிதராக திகழ்கிறார். ஓபிஎஸ் டிடிவி மற்றும் செங்கோட்டையன் மூவரும் சேர்ந்து பசும்பொன் சென்றார்கள். இந்த சூழலில் யாருக்கு பலம் யாருக்கு பலவீனம் என்பது அவர்கள் எடுக்கும் முடிவை பொறுத்துதான் உள்ளது.

இப்போது அவர்களைப் பற்றி கருத்து சொல்ல விரும்பவில்லை. அதிமுகவை பொறுத்தவரை அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்பது எனது விருப்பம். பீகார் மக்களை திமுகவினர் துன்புறுத்துவதாக பிரதமர் கூறிய கருத்து, தமிழ்நாட்டு மக்களை அவமானப்படுத்தும் வகையில் இருப்பதாக கூறுவது தவறு. ஏற்கனவே, தமிழக முதலமைச்சர் பீகாரிகளை பற்றி பேசியதை தான் பிரதமர் மோடி நேற்று பேசியுள்ளார். முதலமைச்சர்தான் முதலில் வந்தேறிகள் என பேசினார்.

முதல்வர் ஸ்டாலின்தான் பிரிவினையை தூண்டும் விதமாக பேசுகிறார். எனவே , முதலமைச்சர் வட மாநிலம் தென் மாநிலம் என பிரிக்கும் சூழ்ச்சியில் ஈடுபட வேண்டாம். முதலமைச்சருக்கு தோல்வி பயம் வந்துள்ளது . ஒவ்வொரு காலகட்டத்திலும் அவர் பொய்யே பேசி வருகிறார் . இந்த ஆட்சி பொய் சொல்லும் ஆட்சியாக உள்ளது . நகராட்சி நிர்வாகத்துறை பணியாளர் நியமனத்தில் ஊழல் நடந்ததாக கூறப்படுகிறது . அதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும்

கரூர் விவகாரத்தை பொறுத்தவரை இந்த ஆட்சி பழிவாங்கும் ஆட்சி . ஆளுங்கட்சி ஒரு மீட்டிங் நடத்த வேண்டும் என்றால் எங்கு வேண்டுமானாலும் நடத்தலாம் பள்ளிகளை மூடி கூட அவர்கள் நிகழ்ச்சி நடத்துவார்கள் 'என்றார்.

தொடர்ந்து தவெகவுடன் பாஜக கூட்டணி அமைக்குமா என்ற கேள்விக்கு, ' கூட்டணியை பொறுத்தவரை தேர்தல் காலங்களில் எப்படி வேண்டுமானாலும் நடக்கலாம் .அரசியலில் நிரந்தர நண்பர்களும் நிரந்தர பகைவர்கள் இல்லை. நாங்கள் வெற்றியை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறோம். தென்காசி மாவட்டத்திற்கு முதலமைச்சர் ஆயிரம் கோடிக்கு கொண்டு வந்த திட்டங்கள் வெறும் அறிவிப்போடு நின்றுவிடும் ' என்று கூறினார்.

தொடர்ந்து சர்தார் வல்லபாய் படேல் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு மரியாதை செலுத்தப்பட்டது. அப்போது , திடீரென முன்னாள் அமைச்சர்கள் ஆர் பி உதயகுமார் ,கடம்பூர் ராஜு உட்பட அதிமுக முக்கிய நிர்வாகிகளும் பாஜக அலுவலகத்திற்கு வருகை தந்தனர் . அவர்களை நயினார் வரவேற்றார் .பின்னர் அனைவரும் அங்கிருந்த சர்தார் வல்லபாய் படேல் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

READ MORE ABOUT :