திருநெல்வேலி அருகே குடும்பத் தகராறில் ஆத்திரமடைந்த மருமகன், தனது மாமியாரை வெட்டிக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கணவரை தடுக்க வந்த தனது மனைவிக்கும் வெட்டு விழுந்தது.
திருநெல்வேலியை மாவட்டம் சுத்தமல்லி அருகேயுள்ள நரசிங்கநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் செல்லப்பா. இவரது மனைவி வள்ளியம்மாள் (வயது 45). இந்த தம்பதிக்கு துர்கா என்ற மகள் உண்டு. துர்காவிற்கும் மேலச்செவல் பகுதியைச் சேர்ந்த ஆறுமுகநயினார் (வயது 30) என்பவருக்கும் திருமணமாகி நான்கு ஆண்டுகள் ஆகின்றன. இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில், கணவன்-மனைவி இடையே நேற்று இரவு தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, குடிபோதையில் இருந்த ஆறுமுகநயினார், மனைவி துர்காவுடன் சண்டையிட்டு, அவரை அவரது தாய் வீடான நரசிங்கநல்லூரில் கொண்டுவந்து விட்டுச் சென்றுள்ளார்.
மகளின் நிலை கண்டு வேதனையடைந்த துர்காவின் தாயார் வள்ளியம்மாள், மருமகன் ஆறுமுகநயினாரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கண்டித்ததாகக் கூறப்படுகிறது. இதனால், ஆத்திரத்தின் உச்சிக்குச் சென்ற ஆறுமுகநயினார், இன்று காலை மாமியார் வீட்டிற்கு நேரில் வந்துள்ளார். அங்கு வள்ளியம்மாளிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அவர், தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் வள்ளியம்மாள் ரத்த வெள்ளத்தில் சரிந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தாயின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த துர்கா, கணவரை தடுக்க முயன்றுள்ளார். அப்போது , மனைவியையும் ஆறுமுகநயினார் வெட்டியுள்ளார். இதில், காயமடைந்த துர்கா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
தகவல் அறிந்த சுத்தமல்லி காவல்துறையினர், உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும், தப்பி ஓடிய ஆறுமுகநயினாரை தீவிரமாகத் தேடி, சில மணி நேரங்களிலேயே கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ஆறுமுகநயினாரிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.









