அம்பாசமுத்திரம் மற்றும் கல்லிடைக்குறிச்சி நகர மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான புதிய புறவழிச்சாலையை, தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழக சட்டப்பேரவைத் தலைவர் மு. அப்பாவு, செய்தியாளர்களிடம் கூறியதாவது,
"அம்பாசமுத்திரம் சேர்மன் கே.கே.சி. பிரபாகரன் உள்ளிட்ட இப்பகுதி மக்களின் வேண்டுகோளை ஏற்று, மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், ரூ. 65.99 கோடிசெலவில் 6 கிலோமீட்டர் தூரத்திற்கு இந்தப் புதிய புறவழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளது .இதுவரை வீரவநல்லூர் தாண்டி கல்லிடைக்குறிச்சி, அம்பாசமுத்திரம் வழியாக தென்காசி செல்ல அரை மணி நேரத்திற்கு மேலானது. இந்தப் புதிய சாலையின் மூலம் பயண நேரம் 20 முதல் 25 நிமிடங்கள் வரை குறையும்.

தேர்தலுக்காக பிரதமர் தமிழகத்தை அவமதித்துதான் பேசுவார். ஒரிசாவில் பூரி ஜெகந்நாதர் ஆலயத்தின் சாவியை தமிழ்நாட்டைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி பாண்டியன் எடுத்துச் சென்றுவிட்டதாக ஓட்டுக்காகப் பேசினார். உண்மையில், பீகார் மற்றும் பிற மாநிலங்களில் பாஜக கூட்டணி அரசுகள் செய்யும் துன்பங்களைத் தாங்க முடியாமல் தான் மக்கள் இங்கு நலமாக வாழ வருகிறார்கள். இங்கு வரும் அனைத்து மாநிலத் தாய்மார்களும் மகளிருக்கான இலவசப் பேருந்து திட்டத்தில் பயணிக்கிறார்கள். அவர்கள் பிள்ளைகள் அரசுப் பள்ளியில் படித்து, கல்லூரிக்குச் சென்றால் மாதம் ரூ.1000 பெறுகிறார்கள். எனவே, இங்கு யாரும் துன்பப்படவில்லை," என்று பதிலளித்தார்.
அமலாக்கத்துறை, நகராட்சி நிர்வாகத் துறையில் ஊழல் நடந்திருப்பதாகக் கூறி டிஜிபிக்கு கடிதம் எழுதியது முற்றிலும் உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரானது மற்றும் நீதிமன்ற அவமதிப்பாகும். 2017-ல் உச்ச நீதிமன்றம் வழங்கிய ஒரு தீர்ப்பில், 'உறுதிப்படுத்தப்படாத ஆவணங்களின் அடிப்படையில் உயர் அரசியல் அமைப்புப் பதவியில் இருப்பவர்கள் மீது FIR பதிவு செய்வதோ, விசாரணைக்கு உத்தரவிடுவதோ ஜனநாயகத்திற்கே ஆபத்தானது' என்று கூறியுள்ளது. சகாரா டைரிஸ் வழக்கில், குஜராத் முதல்வராக இருந்தபோது தற்போதைய பிரதமர் ரூ.25 கோடி கையூட்டு பெற்றதாக ஆதாரம் இருந்தும், அதை உறுதிப்படுத்தப்படாத ஆவணம் என்று கூறி உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதேபோல, உறுதிப்படுத்தப்படாத ஒரு ஆவணத்தை வைத்துக்கொண்டு, நேர்மையாகச் செயல்படும் அமைச்சர் கே.என். நேரு மீது பழி சுமத்துவதற்காகவும், தேர்தல் நேரத்தில் அரசுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும் என்ற மறைமுக இலக்குக்காகவும் அமலாக்கத்துறை இதைச் செய்கிறது.









