திருநெல்வேலியில் அறப்போர் இயக்கத்தின் கருத்து கேட்பு கூட்டத்தில் வன்முறை: நிர்வாகி மண்டை உடைப்பு

violence-at-arapor-movement-s-meeting-in-tirunelveli


திருநெல்வேலியில், கல் குவாரிகளால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து அறப்போர் இயக்கம் நடத்திய மக்கள் கருத்துக்கேட்பு கூட்டத்தில், குவாரி உரிமையாளர்களின் ஆதரவாளர்கள் புகுந்து தாக்குதல் நடத்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


திருநெல்வேலி ரோஸ் மஹாலில் இன்று (நவம்பர் 2) நடைபெற்ற இந்த நிகழ்வில், சட்டவிரோத கல் குவாரிகளால் மக்கள் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இதில், 100-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் டாக்டர் வி. சுரேஷ் தலைமையிலான நிபுணர் குழுவினர் மக்களின் கருத்துக்களைக் கேட்டறிந்தனர். இக்குழுவில் கிராம சபை வல்லுநர் நந்தகுமார், நீர் மேலாண்மை நிபுணர் உதயகுமார், சுற்றுச்சூழல் நிபுணர் தணிகைவேல் மற்றும் விவசாய மேலாண்மை நிபுணர் நந்தினி ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

கூட்டத்தின் தொடக்கத்தில் பேசிய அறப்போர் இயக்க ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன், திருநெல்வேலியில் ஒரு கோடி மெட்ரிக் டன்னுக்கும் அதிகமாக கனிமவளக் கொள்ளை நடந்திருப்பது குறித்து அளித்த புகார்கள் பற்றி விளக்கினார். இதைத்தொடர்ந்து, ராதாபுரம், ஆலங்குளம், பொன்னாக்குடி, கயத்தாறு, அடைமிதிப்பான்குளம், தாழையூத்து, அம்பாசமுத்திரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மக்கள், தங்கள் பகுதிகளில் அதிகப்படியான வெடிச்சத்தத்தால் வீடுகளில் ஏற்படும் அதிர்வுகள், நிலத்தடி நீர் பாதிப்பு, விவசாய பாதிப்புகள் மற்றும் ராதாபுரம் வாய்க்காலில் தண்ணீர் நிறுத்தப்பட்டது போன்ற பிரச்னைகள் குறித்து கருத்து தெரிவித்தனர்.

மக்கள் தங்கள் குறைகளைத் தெரிவித்துக்கொண்டிருந்தபோது, சுமார் 25 பேர் கொண்ட கும்பல் திடீரென அரங்கிற்குள் நுழைந்தது. குவாரிக்கு ஆதரவான வழக்கறிஞர்கள் என்று தங்களைக் கூறிக்கொண்ட அவர்கள், நிகழ்ச்சியை நடத்த விடாமல் தடுத்து, நாற்காலிகளைத் தூக்கி எறிந்து வன்முறையில் ஈடுபட்டனர். இந்தத் தாக்குதலில், நிபுணர் குழுத் தலைவர் டாக்டர் வி. சுரேஷ் மற்றும் கிராமவாசி ஒருவரும் தாக்கப்பட்டார்கள். இதில் டாக்டர் சுரேஷுக்கு தலையில் காயம் ஏற்பட்டது.

இந்தத் தாக்குதல், மக்கள் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தக் கூடாது என்ற நோக்கத்தில் திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளது என்று அறப்போர் இயக்கம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து காவல்துறையிடம் புகார் அளித்துள்ளதாகவும், தாக்குதல் நடத்தியவர்கள் ஆளும் திமுக கட்சியைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவருவதாகவும் இயக்கம் குற்றம் சாட்டியுள்ளது. தாக்குதல் நடத்திய குண்டர்களை உடனடியாகக் கைது செய்ய வேண்டும்" என அறப்போர் இயக்கம் வலியுறுத்தியுள்ளது.

இந்த வன்முறைக்கு மத்தியிலும், மக்கள் எதிர்கொள்ளும் பாதிப்புகளை ஆவணப்படுத்தி அரசுக்கு அறிக்கையாக சமர்ப்பிக்கும் பணி தொடரும் என அறப்போர் இயக்கம் உறுதியளித்துள்ளது.

READ MORE ABOUT :