நெல்லை : வழக்கிலிருந்து தப்பிக்க ரவுடிகளின் புது வழி : விஷம் குடித்து வீடியோ வெளியிட்டதால் பரபரப்பு

Nellai-panagudi-Rowdy-finds-new-way-to-escape-from-police-and-law

திருநெல்வேலி அருகே, அரிவாளைக் காட்டி மிரட்டிய வழக்கில் இருந்து தப்பிக்கும் நோக்கில், காவல்துறை மீது குற்றம்சாட்டி தற்கொலைக்கு முயன்றதாக வீடியோ வெளியிட்ட வாலிபர் மீது அவதூறு பரப்பியதாக சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

நெல்லை மாவட்டம், தளவாய்புரம் பகுதியைச் சேர்ந்த நல்லையாவின் மகன் எட்வின் (41). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணபெருமாள் என்பவரின் மகன் பவின் சிங்கிற்கும் (25) இடையே நீண்ட நாட்களாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது.கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு பவின் சிங், எட்வினை அரிவாளைக் காட்டி கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது.இதுகுறித்து எட்வின் பணகுடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், காவல்துறையினர் பவின் சிங் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

காவல்துறையினர் இந்த வழக்கில் சட்டரீதியான நடவடிக்கைகளைத் தொடங்கிய நிலையில், பவின் சிங் ஒரு அதிர்ச்சிகரமான செயலில் ஈடுபட்டார். விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றதாகவும், தனது இந்த முடிவுக்கு பணகுடி காவல்துறையினரின் துன்புறுத்தலே காரணம் என்றும் ஒரு வீடியோவை பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டார். இந்த வீடியோ பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த வீடியோ தொடர்பாக நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

"பவின் சிங் மீது பணகுடி காவல் நிலையத்தில் ஏற்கனவே இரண்டு வெவ்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஒருவரை அரிவாளால் வெட்டி காயம் ஏற்படுத்தியது தொடர்பாகவும், மற்றொருவரை முன்விரோதம் காரணமாக அடித்ததாகவும் வழக்குகள் பதியப்பட்டுள்ளன. தற்போது .எட்வின் அளித்த புகாரின் பேரிலும் அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நடவடிக்கைகளில் இருந்து தப்பிக்கவும், வழக்கின் விசாரணையைத் திசை திருப்பவும், பவின் சிங் காவல்துறை மீது களங்கம் கற்பிக்கும் நோக்குடன் இந்த செயலில் ஈடுபட்டுள்ளார். கடந்த 1-ம் தேதி அவர் விஷம் குடித்ததாக கூறும் சம்பவத்திற்கும், காவல்துறையின் சட்டப்பூர்வமான விசாரணைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. விசாரணையின் போது காவல்துறை சார்பில் எந்தவிதமான அத்துமீறலோ, துன்புறுத்தலோ நடைபெறவில்லை.

குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள், சட்ட நடவடிக்கைகளில் இருந்து தப்பிப்பதற்காக காவல்துறையின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் இதுபோன்று தவறான தகவல்களைப் பரப்புவது சட்டப்படி குற்றமாகும். எனவே, அவதூறு பரப்பிய பவின் சிங் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்."

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

READ MORE ABOUT :