நெல்லை : சிறப்பு உதவி ஆய்வாளருக்கு ரூ.2.62 லட்சம் வழங்க காப்பீட்டு நிறுவனத்துக்கு உத்தரவு

Nellai-Insurance-company-ordered-to-pay-Rs-2-62-lakh-to-Special-Assistant-Inspector


திருநெல்வேலி பாளையங்கோட்டை கலிக்காம நாயனார் தெருவைச் சேர்ந்த செல்வம் (வயது 54) என்பவர் திருநெல்வேலி மாநகர காவல் போக்குவரத்துக் குற்றப்பிரிவில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இவர், தனது வீட்டின் மாடியில் இருந்து கீழே இறங்கும் போது கால் தவறி விழுந்து இடது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. உடனே அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது செல்வம் அரசு மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் மாதம் ரூ.275 கட்டணமாக செலுத்தி வந்தார்.

அறுவை சிகிச்சைக்காக ரூ.2,03,873 செலவு செய்திருந்தும், காப்பீட்டு நிறுவனம் ரூ.51,580 மட்டுமே வழங்கியது. மீதி தொகை ரூ.1,53,293 வழங்கப்படவில்லை. மேலும் மருந்து வாங்கிய ரூ.63,663 உட்பட மொத்தம் ரூ.2,15,956/- வழங்க வேண்டும் என செல்வம் கோரிக்கை விடுத்தார். ஆனால், காப்பீட்டு நிறுவனம் வழங்க மறுத்ததால் மன உளைச்சலுக்குள்ளான செல்வம், வழக்கறிஞர் பிரம்மா மூலமாக திருநெல்வேலி நுகர்வோர் குறைதீர்க்கும் ஆணையத்தில் வழக்கு தாக்கல் செய்தார்.

வழக்கை விசாரித்த ஆணையத் தலைவர் கிளடஸ் டோன் பிளசட் தாகூர் மற்றும் உறுப்பினர் கனகசபாபதி ஆகியோர், காப்பீட்டு நிறுவனம் செய்த சேவை குறைபாடும் முறையற்ற வாணிபத்திற்கும் நஷ்ட ஈடாக ரூ.20,000 வழங்கவும், வழக்கு செலவுக்காக ரூ.10,000 வழங்கவும் உத்தரவிட்டனர்.மேலும் அறுவை சிகிச்சை செலவு செய்த மீதத் தொகையான ரூ.2,15,956 தொகையை 6.5% வட்டியுடன் சேர்த்து மொத்தம் ரூ.2,62,767 வழங்க வேண்டும் . ஒரு மாதத்திற்குள் தொகையை வழங்காவிட்டால் 9% வட்டியுடன் சேர்த்து வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.