ஆபாசமாக பேசும் பேராசிரியை - மாவட்ட ஆட்சியரிடத்தில் நெல்லை ராணி அண்ணா கல்லூரி மாணவி மனு

nellai-rani-anna-college-student-files-complaint-about-professor

திருநெல்வேலி ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரியில் முதுகலை இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவி ஒருவர், தனது துறை பேராசிரியர் பாலியல் ரீதியாக துன்புறுத்துவதாகவும், கல்லூரி நிர்வாகம் துணை போவதாகவும் மாவட்ட ஆட்சியரிடத்தில் புகார் மனு அளித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட மாணவி கூறியதாவது, "நான் முதுகலை முதலாம் ஆண்டு படிக்கும் போது, எங்களின் வகுப்பு பொறுப்பாளராக இருந்த சகாய மேரி என்ற பேராசிரியை சரியாக பாடம் நடத்தாதது குறித்தும், மாணவிகளிடம் தரக்குறைவாக பேசுவது குறித்தும் அப்போதைய பொறுப்பு முதல்வர் சுமிதாவிடம் புகார் அளித்தோம். ஆனால், அவர் எந்தவித முறையான விசாரணையும் நடத்தாமல், பேராசிரியைக்கு ஆதரவாக செயல்பட்டு புகாரை மூடி மறைத்துவிட்டார்.

அந்த புகாரை மனதில் வைத்துக்கொண்டு, பேராசிரியை சகாய மேரி, என்னைப் பற்றி தொடர்ந்து தவறான மற்றும் ஆபாசமான கருத்துக்களை மற்ற பேராசிரியர்கள் மற்றும் மாணவிகளிடம் பரப்பி வந்துள்ளார். சமீபத்தில் முதலமைச்சர் கலந்துகொண்ட ஒரு விழாவிற்காக நாங்கள் இரவு 7 மணி வரை கல்லூரியில் இருக்க நேர்ந்தது. அச்சமயத்தில், என்னையும் என் சக மாணவி ஒருவரையும் இணைத்து தவறாக பேசினார்.

இதை தட்டிக்கேட்டபோது, மற்ற பேராசிரியர்கள் முன்னிலையில் சகாய மேரி தன்னை தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும், இதுகுறித்து கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள Internal Complaints Committee புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த குழுவின் தலைவராகவும் அப்போதைய பொறுப்பு முதல்வர் சுமிதாவே இருந்ததால், புகாரை விசாரிப்பதற்கு பதிலாக எங்களை சமாதானம் செய்து அனுப்பினார்.

கல்லூரி நிர்வாகத்திடம் இருந்து நீதி கிடைக்காததால், முதலமைச்சரின் தனிப்பிரிவிற்கு புகார் அனுப்பினேன். தற்போது புதியதாக கல்லூரியின் புதிய முதல்வர் நடத்திய விசாரணையில், பேராசிரியை சகாய மேரி, என்னால் அவரது உயிருக்கு ஆபத்து இருப்பதாகக் கூறி, பிரச்சனையை திசை திருப்ப முயற்சிக்கிறார். பல்கலைக்கழக தேர்வுத்தாள் திருத்தும் போது, தன்னால் என்னை பெயிலாக்கி விட முடியுமென்று மிரட்டுகிறார். நிதியாளர், முன்னாள் பொறுப்பு முதல்வர் சுமிதா மற்றும் Internal Complaints Committee உறுப்பினராகவுள்ள பேராசிரியர் ரவிச்சந்திரன் ஆகியோர் துணை போகின்றனர்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

READ MORE ABOUT :