நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகேயுள்ள பொட்டல் வடக்கு தெருவை சேர்ந்தவர் பார்த்திபன். இவரது மனைவி ரஞ்சிதா (வயது 24). இந்த தம்பதிக்கு ஒரு குழந்தை உள்ள நிலையில் ரஞ்சிதா மீண்டும் கர்ப்பிணியாகியிருந்தார். பாளையங்கோட்டை முருகன் குறிச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த நிலையில், இன்று காலை ரஞ்சிதா தனது தாய் வள்ளிமயில் மற்றும் சகோதரியுடன் உடல் பரிசோதனைக்காக நெல்லைக்கு வந்திருந்தார். அப்போது , தனது தாய் மற்றும் சகோதரியிடம் கழிவறைக்கு செல்வதாக கூறியுள்ளார். ஆனால், வெகு நேரம் ஆகியும் ரஞ்சிதா கழிவறையில் இருந்து வெளியே வரவில்லை.
கழிவறை கதவை தட்டிய போது பதில் இல்லை. இதனால், பதற்றம் அடைந்த தாய் மருத்துவமனை ஊழியர்களிடம் தகவல் கூறினார் . தொடர்ந்து, கழிவறை கதவை உடைத்து பார்த்த போது, உள்ளே துப்பட்டாவால் தூக்கிட்டு ரஞ்சிதா தொங்கிக் கொண்டிருந்தார். இதை கண்டதும், தாய் மற்றும் சகோதரி கதறி அழுதனர். உடனடியாக, பாளையங்கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, ரஞ்சிதா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் , இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதல் கட்ட விசாரணையில் ரஞ்சிதாவிற்கு உடல்நிலை பாதிப்பு இருந்தது, காரணமாக விரக்தியில் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.









