பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் உளுந்து மற்றும் பாசிப்பயறு சாகுபடி செய்யும் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்து பயன் பெறலாம் என திருநெல்வேலி மாவட்ட வேளாண்மை
இணைஇயக்குநர்(பொ) திரு.யுபூவண்ணன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது, ''திருநெல்வேலி மாவட்டத்தில் பிசான பருவ பயிர் சாகுபடி நடைபெற்று வருகிறது. பிசான பருவத்தில் உளுந்து, மற்றும் பாசிப்பயறு சாகுபடி செய்யும் விவசாயிகள் தங்கள் பயிர்களை இயற்கை இடர்பாடுகளான வெள்ள பாதிப்பு மற்றும் வறட்சி பாதிப்பிலிருந்து பாதுகாத்திட பயிர் காப்பீடு செய்யலாம். தற்போது, திருநெல்வேலி மாவட்டத்தில் யுனிவர்சல் சாம்போ ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனம் மூலம் பயிர் காப்பீடு செய்திட அரசாணை பெறப்பட்டு பயிர்காப்பீடு செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
இதில், அறிவிக்கை செய்யப்பட்டுள்ள கிராமங்களின் விவரங்களை விவசாயிகள் உழவன் செயலியில் அறிந்து கொள்ளலாம். அறிவிக்கை செய்யப்பட்ட கிராமங்களில் உள்ள அனைத்து விவசாயிகளும் பயிர்காப்பீடு செய்ய தகுதி உடையவராவர். மேலும் காப்பீடு செய்ய விரும்பும் விவசாயிகள் பொது சேவை மையங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் இவற்றில் ஏதேனும் ஒன்றினை அணுகி பதிவு செய்யலாம் .
அல்லது www.pmfby.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாகவும் விண்ணப்பிக்கலாம். காப்பீடு செய்ய விரும்பும் விவசாயிகள் பூர்த்தி செய்து கையொப்பமிட்டு முன்மொழிவு விண்ணப்பத்துடன், கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் நடப்பு பருவ அடங்கல் (அ) மின்னணு முறையில் வேளாண் துறையினரால் வழங்கப்படும் அடங்கல், ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட ஆதார் வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், சிட்டா/ பட்டா நகல் மற்றும் அட்டை நகல் ஆகியவற்றை இணைத்து பதிவு செய்ய வேண்டும். பயிர் காப்பீடு செய்ய வரும் நவம்பர் 15ம் தேதி கடைசி தேதி ஆகும்.
உளுந்து பயிருக்கு பயிர் காப்பீடு செய்ய ஏக்கருக்கு ரூ.255 பிரீமியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பாசி பயிருக்கு பயிர் காப்பீடு செய்ய ஏக்கருக்கு ரூ.170 பிரீமியத் தொகையாக நிர்ணியிக்கப்பட்டுள்ளது. பயிர் காப்பீடு திட்டம் தொடர்பான தகவல்களுக்கு விபரங்களுக்கு தொலைபேசி எண்ணான "14447” என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். மேலும், தங்கள் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தை கொள்ளலாம். எனவே, விவசாயிகள் நவம்பர் 15ம்தி வரை காத்திருக்காமல் உடனடியாக பயிர் காப்பீடு செய்து பயனடைய கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். '
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.










