தென்மாவட்ட அரசியலில் பெரும் திருப்புமுனையாக, திருநெல்வேலி மாவட்டம், ஆலங்குளம் தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் மனோஜ் பாண்டியன், அக்கட்சியில் இருந்து விலகி, தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் இன்று திராவிட முன்னேற்றக் கழகத்தில் (திமுக) தன்னை இணைத்துக் கொண்டார்.
*திமுகவில் ஐக்கியமான மனோஜ் பாண்டியன்:*
மறைந்த முன்னாள் சபாநாயகரும், அதிமுகவின் மூத்த தலைவருமான பி.ஹெச். பாண்டியனின் மகனான மனோஜ் பாண்டியன், அதிமுகவில் பல்வேறு முக்கியப் பொறுப்புகளை வகித்தவர். கடந்த சட்டமன்றத் தேர்தலில் ஆலங்குளம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். கடந்த சில காலமாக அதிமுக தலைமை மீது அதிருப்தியில் இருந்ததாகக் கூறப்பட்ட நிலையில், இன்று அவர் தனது ஆதரவாளர்களுடன் சென்னைக்குச் சென்று, முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து திமுகவில் இணைந்தார்.
மனோஜ் பாண்டியன் திமுகவில் இணைந்ததையடுத்து, அவரது சொந்த ஊரான வீரவநல்லூர் மற்றும் ஆலங்குளம் தொகுதி முழுவதும் உள்ள அவரது ஆதரவாளர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். பட்டாசுகளை வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கியும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
அவரது ஆதரவாளர்கள் கூறுகையில், "எங்கள் தலைவர் மனோஜ் பாண்டியன் சரியான முடிவை எடுத்துள்ளார். இது திமுகவிற்கு கிடைத்துள்ள மாபெரும் வெற்றி. இது ஒரு புதிய அலைக்கு தொடக்கமாகவும், அவரைத் தொடர்ந்து இன்னும் சில நாட்களில் ஆயிரக்கணக்கானோர் அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைவார்கள், "வரும் சட்டமன்றத் தேர்தலில், எங்கள் தலைவர் மனோஜ் பாண்டியனை அம்பாசமுத்திரம் தொகுதியில் போட்டியிட வைத்து, அவரை மாபெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்வோம். அவரது வெற்றி நிச்சயம்," என்றனர்.
மனோஜ் பாண்டியனின் இந்த முடிவு, திருநெல்வேலி மாவட்ட அரசியலில் புதிய சமன்பாடுகளுக்கு வழிவகுத்துள்ளது. இது வரும் தேர்தல்களில் திமுகவிற்கு பெரும் பலத்தைச் சேர்க்கும் என்றும், அதிமுகவிற்கு கணிசமான சரிவை ஏற்படுத்தும் என்றும் அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.










