நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள பத்மநிதி கிராமத்தைச் சேர்ந்தவர் பிச்சை இசக்கி (வயது 21). கடந்த ஆகஸ்ட் மாதம் 3-ந்தேதி கிராமத்தில் நடந்த கோவில் கொடை விழாவில் ஏற்பட்ட தகராறின் போது, இசக்கியின் கை துண்டாக வெட்டப்பட்டது. ரத்தம் சொட்டச்சொட்ட, துண்டிக்கப்பட்ட கையுடன் அவர் அதிகாலை 5.30 மணியளவில் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். உடனடியாக , மருத்துவக்குழுவினர் பிச்சை இசக்கிக்கு முதலுதவி அளித்து அறுவை சிகிச்சைக்கான ஏற்பாடுகளை துரிதமாக மேற்கொண்டனர். பின்னர், சுமார் 10 மணி நேரம் அறுவை சிகிச்சை செய்து இசக்கிக்கு கையை மீண்டும் பொருத்தினர்.
நெல்லை அரசு மருத்துவமனையின் பிளாஸ்டிக் சர்ஜரி மற்றும் எலும்பியல் துறை மருத்துவர்கள் இணைந்து இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளனர். முதலில், எலும்பியல் துறை மருத்துவர்கள் துண்டிக்கப்பட்ட எலும்புகளை மீண்டும் ஒன்றிணைத்தனர். பின்னர், பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர்கள், நுண்ணோக்கிகள் உதவியுடன் துண்டிக்கப்பட்ட ரத்த நாளங்கள், நரம்புகள் மற்றும் தசைநார்களை நுட்பமாக இணைத்தனர்.
இந்த வெற்றிகரமான சிகிச்சையில் டீன் ரேவதி பாலன் வழிகாட்டுதலின் பேரில் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை துறை டாக்டர்கள் அகமது மீரான், பாலாஜி, சூர்யா சர்மா, ராஜா, கோகுல் மற்றும் பால் வின்சென்ட், எலும்பியல் துறை பேராசிரியர் டாக்டர். செல்வராஜன், உதவி மருத்துவர் டாக்டர் அறிவு, மயக்கவியல் துறை நிபுணர்கள் டாக்டர் சௌந்தரி, லீலா மற்றும் செவிலியர்கள் அனிதா மற்றும் ஜான்சிராணி ஆகியோர் செய்தனர்.
இந்தச் சாதனைக்கு காரணமான பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை துறை, எலும்பியல் துறை மற்றும் மயக்கவியல் துறை மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் அனைத்துப் பணியாளர்களுக்கும் மனமார்ந்த பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் மருத்துவமனை டீன் ரேவதி பாலன் தெரிவித்துள்ளார். இத்தகைய சிக்கலான அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக செய்து முடிக்கும் திறன் மற்றும் அர்ப்பணிப்புணர்வு நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் சிறப்பான மருத்துவ சேவைக்கு நல்லதொரு எடுத்துக்காட்டாகும்.
சம்பவம் நடந்த தினத்தில், முன்னாள் போலீஸ் சூப்பிரண்டு அசோக் யாதவ் மற்றும் டாக்டர் பாஸ்கர் ஆகியோர் பிச்சை இசக்கியை சரியான நேரத்தில் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அவர்களுக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இளைஞரின் தந்தையும் மருத்துவக்குழுவினருக்கு தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார் .









