அம்பை பஸ் நிலையத்திற்குள் பஸ்சை இயக்காமல் சென்றதாகக் கூறி அரசு பஸ் டிரைவருக்கு போக்குவரத்து கழகம் விதித்த அபராதத்தை நெல்லை தொழிலாளர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
நெல்லை அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் பஸ் டிரைவராக பணிபுரிபவர் சுடர். இவர் கடந்த 2019ம் ஆண்டு பிப்.,2ம்தேதி நெல்லையிலிருந்து பாபநாசம் செல்லும் பஸ்சை இயக்கியுள்ளார். அன்றைய தினத்தில் அவர், அம்பை பேருந்து நிலையத்திற்குள் பஸ்சை 4 முறை இயக்காமல் சென்றதாகக் கூறி, நிர்வாகம் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்தது. இதுதொடர்பாக அதே ஆண்டு டிசம்பர் 13ம்தேதி டிரைவர் சுடருக்கு ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டது.
இந்த அபராத உத்தரவை ரத்து செய்யக் கோரி, அரசு போக்குவரத்து எம்பிளாயீஸ் யூனியன் சார்பில் நெல்லை தொழிலாளர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கு விசாரணையின்போது டிரைவர் தரப்பில், சம்பவத்தன்று அம்பை பேருந்து நிலையத்திற்குள் ஏற்கனவே 3 கழகப் பேருந்துகள் நின்றிருந்தன. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, கால தாமதம் ஆகும் சூழல் உருவானது. கழகத்திற்கு வருவாய் இழப்பு ஏற்படக்கூடாது என்ற நல்லெண்ணத்தில், பயணிகளின் ஒத்துழைப்புடனேயே பேருந்து நிலையத்திற்கு வெளியே பயணிகளை இறக்கிவிட்டுச் சென்றேன். இதுகுறித்து இன்ஸ்பெக்டர் ஒருவர் தூண்டுதலின் பேரில் புகார் அளித்துள்ளார் என விளக்கம் அளிக்கப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த தொழிலாளர் நீதிமன்ற நீதிபதி பிலிப் நிக்கோலஸ் அலெக்ஸ் ஓட்டுநர் மீதான குற்றச்சாட்டுக்கு அடிப்படை ஆதாரமான புகார் நகல் எதுவும் போக்குவரத்துக்கழக நிர்வாகத்தால் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படவில்லை. டிரைவர் மீதான உள் விசாரணை தொடர்பான முக்கிய ஆவணங்களான விசாரணை அறிக்கை, சாட்சியங்கள் மற்றும் குறிப்புகள் போன்ற எதையும் நிர்வாகம் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவில்லை.
2023ம்ஆண்டு டிசம்பர் மாதம் நெல்லையில் ஏற்பட்ட வெள்ளத்தில் ஆவணங்கள் தொலைந்து விட்டதாக நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், ஆவணங்கள் சேதமடைந்தது குறித்து நிர்வாக ரீதியான அறிக்கை அல்லது கணக்கீடு என எந்த ஆதாரத்தையும் நிர்வாகம் சமர்ப்பிக்கவில்லை. எனவே, இந்த வாதத்தை நீதிமன்றம் ஏற்காது என சுட்டிக்காட்டினார். அதைத்தொடர்ந்து டிரைவர் சுடருக்கு வழங்கப்பட்ட ரூ.200 அபராத உத்தரவை ரத்து செய்து நீதிபதி உத்தரவிட்டார்.









