நெல்லை அரசு மருத்துவமனை : எலும்பு முறிவு சிகிச்சை கட்டிடத்தில் 3 தளங்களிலும் குடிநீர்- நீதிமன்றம் உத்தரவு

Nellai-Government-Hospital-Court-orders-drinking-water-on-all-3-floors-of-bone-fracture-treatment-building


நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் எலும்பு முறிவு முடநீக்கியல்துறை சம்பந்தமான பிரச்சனைகளுக்கு மருத்துவ சிகிச்சை அளிப்பதற்காக மருத்துவமனை வளாகத்தில் தரைத்தளம் உட்பட 3 தளங்கள் கொண்ட கட்டடம் ஒன்று செயல்பட்டு வருகிறது இதில் மூன்றாம் தளம், இரண்டாம் தளம், முதல் தளத்தில் தங்கி சிகிச்சை பெறுபவர்கள் மற்றும் உடனிருப்பவர்களுக்கு குடிநீர் வசதி செய்யப்படவில்லை என்று நோயாளிகளின் குற்றஞ்சாட்டினர்.

தரைத்தளத்திற்கு வந்துதான் குடிநீர் எடுத்துச் செல்வதாகவும், 3 தளங்களிலும் குடிநீர் வசதி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும், தரைத் தளத்திலும் சில நேரங்களில் குடிநீர் கிடைப்பதில்லை, வெளியில் சென்று கடைகளில் பணம் கொடுத்து வாங்கி வருவதாக நோயாளிகள் தரப்பில் சொல்லப்பட்டது. எனவே, எலும்பு முறிவு முடநீக்கியல்துறை சம்பந்தமான கட்டடத்தில் 3 தளங்களிலும் குடிநீர் கிடைப்பதற்கான ஏற்பாட்டினை உடனடியாக செய்திடவும், தரைத்தளத்தில் தடங்கல் இல்லாமல் குடிநீர் கிடைத்திடவும் நடவடிக்கை எடுத்திட வேண்டும் என நெல்லை மாவட்ட கலெக்டரிடம் நெல்லை மாவட்ட பொதுஜன பொது நலச் சங்க தலைவர் முகமது அயூப் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோரிக்கை வைத்தார்.

இந்த கோரிக்கைக்கு கல்லூரி டீன் டாக்டர் ரேவதி பதில் அளித்து கூறுகையில், 'அனைத்து தளங்களிலும் குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது. குடிநீரில் கைகழுவுவது, சாப்பிட்ட பாத்திரங்களை கழுவுவது, பல் துலக்குவது, தண்ணீரை வீணாக்குவது போன்ற செயல்கள் அடிக்கடி நடைபெற்றது. இதனால் சுகாதாரமற்ற நிலை ஏற்பட்டது.சிந்திய தண்ணீரில் சிலர் வழுக்கி விழுந்து காயமடைந்த சம்பவங்களும் நடந்துள்ளது. இந்த காரணங்களால் தரைத்தளத்தில் டாக்டர்கள், செவிலியர்கள், கண் பார்வை படும் இடத்தில் குடிநீர் வசதி ஏற்படுத்தப்பட்டு மற்ற தளங்களில் குடிநீர் வசதி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது' என்று பதில் அளித்தார்.

தொடர்ந்து, இந்த பிரச்னை குறித்து நெல்லை பொதுஜன பொதுநல சங்க தலைவர் முகமது அய்யூப் நெல்லை மாவட்ட நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் மனு அளித்தார். மனுவை நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி மாதவ ராமானுஜம் விசாரணை நடத்தி இன்று அதற்கான உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது, ' மனுதாரரின் இந்த கோரிக்கை என்பது ஏற்கக் கூடிய நியாயமானது. குடிநீர் என்பது நோயாளிகளுக்கு மறுக்கப்படக்கூடாது. உடல்நிலை பாதிக்கப்பட்டவர்கள் தரைத்தளத்தில் வந்து தான் தண்ணீர் குடிக்க வேண்டும் என்பது ஏற்க முடியாது. தண்ணீரை வீணாக்குகிறார்கள் என்று மருத்துவமனை நிர்வாகம் சொல்வதை ஏற்க முடியாது.

எனவே, கட்டடத்தின் 3 தளங்களிலும் உடனடியாக குடிநீர் வழங்குவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். அதற்கான, பணிகளை இந்த உத்தரவு வழங்கப்பட்டதில் இருந்து ஒரு மாத காலத்திற்குள் மேற்கொண்டு விட வேண்டும். அதே நேரம் தண்ணீரை நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்கள் வீணாக்க வேண்டாம். அதனை குடிப்பதற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற அறிவிப்பு பலகையையும் வைக்க வேண்டும் " என குறிப்பிட்டார்.

இந்த உத்தரவு குறித்து டீன் ரேவதி பாலன் கூறுகையில், 'நீதிமன்ற உத்தரவை மதிக்கிறோம் . நோயாளிகளின் நலன் கருதி குடிநீர் வசதி அனைத்து தளங்களிலும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதனை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வருவதில் எங்களுக்கு எவ்வித பிரச்சனையும் இல்லை. ஆனால் ,நோயாளிகளும் அவர்களது உறவினர்களும் தாங்களாகவே முன்வந்து சுத்தம், சுகாதாரத்தை கடைபிடிக்க வேண்டும். தண்ணீரை வீணாக்காமல் குடிப்பதற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்'' என்றார்.