திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே உள்ள செட்டிமேடு பகுதியில் ஒரு வீட்டின் மீது மர்ம நபர்கள் மண்ணெண்ணெய் குண்டு வீசிய சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
செட்டிமேடு பகுதியைச் சேர்ந்தவர் அமுதா. இவரது வீட்டின் மீது நேற்று இரவு மர்ம நபர்கள் இரண்டு பாட்டில்களை வீசி எறிந்துள்ளனர். பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாக முதலில் தகவல் பரவியதால், அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர். இதுகுறித்து உடனடியாக விக்கிரமசிங்கபுரம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், தடயங்களைச் சேகரித்து விசாரணையைத் தொடங்கினர். முதற்கட்ட விசாரணையில், வீசப்பட்டது பெட்ரோல் குண்டுகள் அல்ல, அவை மண்ணெண்ணெய் நிரப்பப்பட்ட பாட்டில்கள் என்பது தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து மாவட்ட காவல்துறை தரப்பில் கூறுகையில், "இது பெட்ரோல் குண்டு அல்ல, மண்ணெண்ணெய் நிரப்பப்பட்ட பாட்டில்தான். உள்ளூர் ஏற்பட்ட வாய் தகராறு காரணமாக இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்தத் தாக்குதலில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை மற்றும் எந்தப் பொருளுக்கும் சேதம் இல்லை. சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர், அவர்களைப் பிடிக்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன," என்கின்றனர்.
தனிப்பட்ட முன்விரோதம் காரணமாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டதா அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா என்ற கோணத்தில் விக்கிரமசிங்கபுரம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.







