ஒரே கடையில் சிக்கிய 3 டன் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் : நெல்லையில் அதிர்ச்சி சம்பவம்

3-tons-of-banned-plastic-found-in-a-single-shop-shocking-incident-in-nellai

சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் மற்றும் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலுமாக ஒழிக்கும் நோக்கில், திருநெல்வேலி மாவட்ட உணவு பாதுகாப்புத் துறையினர், நகரத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையின் போது, டன் கணக்கிலான தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

திருநெல்வேலி டவுன் பகுதியில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் மேற்கொண்ட அதிரடி சோதனையில், ஒரே கடையிலிருந்து சுமார் மூன்று டன் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் கைப்பற்றப்பட்டது. உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட அலுவலர் டாக்டர். புஷ்பராஜ் மற்றும் குழுவினர் பறிமுதல் செய்த போது டவுன் வியாபாரிகள் சங்கத்தினர் அரசியல் கட்சிதலைவர்களின் பெயர்களை கூறி , பிளாஸ்டிக் பொருட்களை எடுத்துச் செல்வதை தடுத்தனர். இதனால், அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதனையடுத்து, உணவு பாதுகாப்புத் துறை, மாவட்ட சுற்றுச்சூழல் துறை மற்றும் பிற அரசுத் துறைகள் இணைந்து, சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். சட்டவிரோதமாக பெரும் அளவிலான தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களைப் பதுக்கி வைத்திருந்த கடைகளுக்கு 'சீல்' வைக்கப்படும் என்றும், சட்டரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

இந்த சோதனை குறித்து அதிகாரிகள் கூறுகையில், "தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை பொதுமக்கள் முற்றிலும் தவிர்க்க வேண்டும். அதேபோல, வியாபாரிகளும் இது போன்ற பொருட்களை விற்பனை செய்ய கூடாது. சுற்றுச்சூழலைப் பாதுகாக்க இந்த நடவடிக்கை மிகவும் அவசியம். இதுபோன்ற அதிரடி சோதனைகள் மாவட்டம் முழுவதும் தொடர்ந்து நடத்தப்படும்" என்று தெரிவித்துள்ளனர்.

READ MORE ABOUT :