நெல்லையில் 6 இடங்களில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் தேடப்பட்டு வந்த தேவேந்திரகுல வேளாளர் எழுச்சி இயக்கத்தின் தலைவர் கண்ணபிரானை, மற்றொரு வழக்கில் ஜாமீனில் வெளிவந்தபோது, கடலூர் மத்திய சிறை வாசலிலேயே நெல்லை தனிப்படை போலீஸார்கைது செய்தனர்.
இந்த நிலையில், கண்ணபிரானின் மனைவி பேச்சியம்மாள் கூறுகையில் , எனது ஊர் சத்ரூப்புதூர். என் கணவர் பெயர் கண்ணபிரான் என்கிற கண்ணபிரான் பாண்டியன். இவர், தேவேந்திரகுல வேளாளர் எழுச்சி இயக்கத்தின் நிறுவனத் தலைவர். மக்கள் அவரை "இரண்டாம் பசுபதி" என்றுதான் அழைப்பார்கள். மக்களுக்கு என்ன பிரச்சனை என்றாலும், போராட்டம் நடத்தி அவர்களுக்கு தேவையான நிதியுதவியை பெற்றுத் தருவார்.

என் கணவர் மீது பல பொய் வழக்குகள் போடப்பட்டுள்ளன. மூன்று வாரங்களுக்கு முன்பு கூட, தச்சநல்லூர் காவல் நிலையம் முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாக ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதில், சம்பந்தப்பட்ட அருண்குமார் என்ற இளைஞன் எங்கள் வீட்டில் தங்கியிருந்தான் என்பது உண்மைதான். ஆனால், அவனுக்கும் என் கணவருக்கும் ஒரே வழக்கில் நிபந்தனை ஜாமீன் கிடைத்ததால், கையெழுத்து போடுவதற்காக மட்டும் எங்கள் வீட்டில் தங்கினான். காவல்துறை அவனை வீட்டில் வைத்திருக்கக் கூடாது என்று சொன்ன பிறகு, நாங்கள் வெளியேற்றி விட்டோம்.
ஆனால், காவல்துறை அருண்குமாரிடம் கஞ்சா இருந்ததாகக் கூறி வழக்கு பதிவு செய்துள்ளனர். இதுகுறித்து, காவல் ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர் என் கணவருக்கு தொலைபேசியில் தகவல் தெரிவித்தனர். நாங்கள் நேரில் சென்று பேசியபோது, அந்த இளைஞன் தன்மீது எந்த தவறும் இல்லை என்றும், காவல்துறைதான் பொய்யாக வழக்கு போடுவதாகவும் கூறினான்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, அருணின் தம்பி மற்றும் அவனது நண்பர்கள் சிலர் தச்சநல்லூர் காவல் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீசியுள்ளனர். இதற்கு என் கணவர்தான் காரணம் என்று கூறி, அவரை இந்த வழக்கில் சேர்த்துள்ளனர். ஆனால், சம்பவம் நடந்த தினத்தில் இரவு 3 மணி வரை என் கணவர் காவல்நிலைய அதிகாரிகளுடன் தொலைபேசியில் பேசிக்கொண்டுதான் இருந்தார். அப்படியிருக்கும்போது, அவர் எப்படி இந்த சம்பவத்திற்கு காரணமாக இருக்க முடியும்?
சம்பவம் நடந்த தினத்தில் என் கணவரை கைது செய்யாமல், இவ்வளவு நாட்கள் கழித்து இப்போது கைது செய்வது ஏன்? இது முழுக்க முழுக்க என் கணவரை பழிவாங்கும் நோக்கத்தோடு, சாதி ரீதியாக செய்யப்படும் சதி.என் கணவர் மீது போடப்பட்டுள்ள அனைத்து வழக்குகளும் பொய். திருச்சியில் ஒரு விழாவிற்கு சென்றிருந்தபோது கூட, 500 ரூபாய் வழிப்பறி செய்ததாக ஒரு பொய் வழக்கு போட்டார்கள். 10 லட்சம் ரூபாய் காரில் செல்லும் அவர், 500 ரூபாய்க்காக வழிப்பறி செய்வாரா?

இப்போது கூட, என் கணவரை ஜாமீனில் எடுக்க வேண்டாம் என்று சொல்கிறார்கள். அவர் மீது 7 வழக்குகள் போட்டிருக்கிறார்கள். நாங்கள் எப்படி ஜாமீனில் எடுக்க முடியும்? இது முழுக்க முழுக்க பொய் வழக்கு. இதை நிரூபிக்க, சம்பந்தப்பட்ட இளைஞர்களிடம் முறையாக விசாரணை நடத்த வேண்டும். என் கணவர் சொன்னதால்தான் குண்டு வீசினோம் என்று ஒரு வார்த்தை சொன்னால், நாங்கள் இந்த இடத்தை விட்டு நகர்ந்து விடுகிறோம்ட.
என் கணவருக்கு நீதி கிடைக்கும் வரை நான் இங்கிருந்து நகர மாட்டேன். என் பிள்ளைக்கு நான் பால் கொடுக்க மாட்டேன். என் வாழ்க்கைக்கு உத்தரவாதம் வேண்டும். என் கணவரை விடுதலை செய்யும் வரை எனது போராட்டம் தொடரும். நேற்று என் கணவரை விடுதலை செய்வதாகக் கூறியதால், நான் குழந்தையுடன் கடலூர் மத்திய சிறைக்குச் சென்றேன். ஆனால், அங்கும் அவரை விடுதலை செய்யவில்லை. எல்லாம் திட்டமிட்டு செய்யப்படுகிறது. இது சாதி ரீதியாக என் கணவரை பழிவாங்கும் செயல். இதை நான் சும்மா விடமாட்டேன். எனக்கு நீதி வேண்டும்.
இவ்வாறு கண்ணபிரானின் மனைவி பேச்சியம்மாள் கண்ணீர் மல்க தெரிவித்தார்.








