திருநெல்வேலியில் தாமிரபரணி ஆற்றில், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில், ஒரு லட்சம் மீன் குஞ்சுகளை ஆற்றில் விடும் பணி இன்று நடைபெற்றது. இந்தப் பணியை மாவட்ட ஆட்சியர் சுகுமார், பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வகாப் , திருநெல்வேலி மாநகராட்சி மேயர் ராமகிருஷ்ணன்,துணை மேயர் ராஜூ ஆகியோர் துவக்கி வைத்தனர்.
நிகழ்ச்சியின் போது, மீனவர் நலத்துறை அதிகாரிகள், இந்த முயற்சி தாமிரபரணி ஆற்றுக்கும், அதில் வாழும் பிற விலங்கினங்கள் மற்றும் உயிரினங்களுக்கும் நன்மை பயக்கும். ஆற்றின் ஆரோக்கியம் பாதுகாக்கப்படும் என்றனர்.
*மீன் குஞ்சுகள் விவரம்:*
மொத்தம் ஒரு லட்சம் மீன் குஞ்சுகள் ஆற்றில் விடப்பட்டன. இதில் இடம்பெற்ற மீன் வகைகளின் எண்ணிக்கை விவரம்:
* *கட்லா (Catla) வகை:* 30,000 குஞ்சுகள்
* *ரோகு (Rohu) வகை:* 30,000 குஞ்சுகள்
* *சேல் கெண்டை (Seal Kendai) வகை:* 40,000 குஞ்சுகள்
*தாமிரபரணியின் சிறப்பு இனம் 'சேல் கெண்டை':*
ஒவ்வொரு ஆற்றுக்கும் உரிய தனிச்சிறப்பான (Native Species) மீன் இனங்கள் உள்ளன . தாமிரபரணி ஆற்றுக்குரிய சிறப்பியல்பு பெற்ற இனம் *'சேல் கெண்டை'* மீன். இந்த வகை மீன்கள் அதிகமாகப் பெருகும்போது, தாமிரபரணி ஆற்றின் ஆரோக்கியம் மேம்படும் . மற்ற இனங்களைக் காட்டிலும் இந்த வகை குஞ்சுகள் 40,000 என்ற எண்ணிக்கையில் விடப்பட்டுள்ளன.
நிகழ்ச்சியின் போது, 'ஆற்றைப் பேணிக் காக்கும் இந்த நல்ல முயற்சிக்கு மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு அளித்து, ஆற்றை மாசுபடாமல் பாதுகாக்க வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியர் சுகுமார் மக்களிடத்தில் கேட்டுக்கொண்டார்.







