தொழிலாளர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை 6 ஆண்டுகளாக அமல்படுத்தாமல், அரசு பஸ் டிரைவருக்கு வழங்க வேண்டிய பணப்பலன்களை வழங்காத தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு நெல்லை தொழிலாளர் நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. நிலுவைத் தொகையை வரும் நவம்பர் 24ம் தேதிக்குள் வழங்காவிட்டால், போக்குவரத்துக் கழகத்தின் பொது மேலாளரைக் கைது செய்ய உத்தரவிட நேரிடும் என நீதிபதி பிலிப் நிக்கோலஸ் அலெக்ஸ் கடுமையாக எச்சரித்து உள்ளார்.
நெல்லை அரசு போக்குவரத்துக் கழகத்தின் விளாத்திகுளம் பணிமனையில் அரசு பஸ் டிரைவராக பணியாற்றி வருபவர் தங்கராஜ். இவரது வருடாந்திர ஊதிய உயர்வை 6 மாதங்களுக்கு நிறுத்தி வைத்து, கடந்த 2016ம் ஆண்டு செப்.,29ம்தேதி நெல்லை மண்டல அரசு போக்குவரத்துக்கழகம் நிர்வாகம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து, நெல்லை, சிதம்பரனார், குமரி மாவட்ட அரசு போக்குவரத்து எம்ப்ளாயீஸ் யூனியன் சார்பில் நெல்லை மாவட்ட தொழிலாளர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிமன்றம், 2021ம் ஆண்டு ஜன.,21ல் டிரைவருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்டது. மேலும், அவருக்கு வழங்கப்பட வேண்டிய அனைத்து பணப்பலன்களையும் 2 மாதங்களுக்குள் வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்தது. ஆனால், தீர்ப்பு வெளியாகி பல ஆண்டுகள் ஆகியும், நிர்வாகம் பணப்பலன்களை வழங்கவில்லை.
இதைத் தொடர்ந்து, தொழிற்சங்கம் சார்பில் நீதிமன்றத்தில் நிறைவேற்று மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தத் தவறிய அப்போதைய பொது மேலாளர் சரவணனை கைது செய்து 6 மாதங்கள் சிறையில் அடைக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரப்பட்டது இந்த மனு, நீதிபதி பிலிப் நிக்கோலஸ் அலெக்ஸ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, நிர்வாகம் தரப்பில் கால அவகாசம் கோரப்பட்டது.
இதை ஏற்க மறுத்த நீதிபதி தனது உத்தரவில், நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து சுமார் 6 ஆண்டுகள் ஆகியும், அதுகுறித்த விவரம் நிர்வாகத்திற்குத் தெரியப்படுத்தி 5 ஆண்டுகள் கடந்த பின்னரும், உத்தரவை செயல்படுத்தாமல் இருந்தது நிர்வாகத்தின் செயல்பாடற்ற தன்மையைக் காட்டுகிறது. இது கண்டனத்திற்குரியது என்று குறிப்பிட்டார்.
மேலும், நிர்வாகத்தின் தலைமை அதிகாரியான பொது மேலாளர், நீதிமன்ற உத்தரவுகளைச் செயல்படுத்துவதில் சுணக்கம் காட்டினால், அந்தச் செயல் தண்டனைக்குரியது. எனவே, போக்குவரத்துக் கழக நிர்வாகம், பாதிக்கப்பட்ட தொழிலாளிக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை வரும் வருகிற 24ம் தேதிக்குள் வழங்கிட வேண்டும். தவறும் பட்சத்தில், பொது மேலாளரை கைது செய்ய உத்தரவிடப்படும் என்று நீதிபதி தனது உத்தரவில் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.










