நெல்லை சாலைகளில் உயிரை வாங்க காத்திருக்கும் பொத்தல்கள் உறங்கும் அதிகாரிகள்

Roads-in-Nellai-are-full-of-potholes

வடகிழக்கு பருவமழை மீண்டும் தொடங்கியுள்ள நிலையில், வண்ணார்பேட்டை மேம்பாலம் அருகே உள்ள வடக்கு புறவழிச்சாலை சர்வீஸ் ரோட்டில் குளம்போல் மழைநீர் தேங்கி நிற்கிறது.

நெல்லையில் பரவலாக மழை பெய்த நிலையில், நேற்று (நவம்பர் 13) மதியம் 2.45 மணி அளவில் மீண்டும் பலத்த கனமழை பெய்தது. சுமார் இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக பெய்த கனமழையால், வண்ணார்பேட்டை மேம்பாலம் அருகே வடக்கு புறவழிச் சாலை சர்வீஸ் ரோட்டில் மழைநீர் அதிக அளவில் தேங்கியது. ​இந்தச் சாலையில் பொத்தல்கள் அதிகள் உள்ளன. மழைநீர் தேங்கியிருந்த காரணத்தால் பள்ளங்கள் வெளியில் தெரியவில்லை. இதனால் , வாகன ஓட்டிகளும், நடந்து சென்றவர்களும் மிகவும் மெதுவாகவே செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்த சாலையில் நேற்று ஒருவர் தனது மோட்டார்சைக்கிளின் பின் இருக்கையில், பெண் மற்றும் குழந்தையுடன் வந்து கொண்டிருந்தார்.

​அப்போது, எதிர்பாராதவிதமாக அங்குள்ள பள்ளத்தில் மோட்டார் சைக்கிள் ஏறி இறங்கியபோது, பின்னால் அமர்ந்திருந்த பெண் நிலைதடுமாறி குழந்தையுடன் சாலையில் விழுந்தார். இந்த தருணத்தில் , பின்னால் வந்த ஒரு காரை ஓட்டி வந்த டிரைவர் உடனடியாகச் சுதாரித்து பிரேக் பிடித்ததால், அந்தப் பெண்ணும் குழந்தையும் நூலிழையில் உயிர் தப்பினர். ​கீழே விழுந்த அதிர்ச்சியில் இருந்த அந்தப் பெண், பதற்றத்துடன் எழுந்து குழந்தையைத் தூக்கிக்கொண்டு சாலையின் பக்கவாட்டுக்குச் செல்ல முயன்றார். அப்போது, அங்கிருந்த மற்றொரு பள்ளத்தில் அவரது கால் சிக்கியதால், மீண்டும் குழந்தையுடன் கீழே விழுந்தார். ​அருகில் இருந்தவர்கள் உடனடியாக ஓடி வந்து, பெண்ணையும் குழந்தையையும் மீட்டு சாலையின் ஓரத்துக்கு கொண்டு சென்றனர். இந்தச் சம்பவத்தால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

நெல்லை நகரில் பல இடங்களில் இதேபோல் அபாயகரமான பொத்தல்கள் உள்ளன. இவற்றை தற்காலிகமாகவாது சரி செய்ய வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

READ MORE ABOUT :