நெல்லையில் ரேஷன் அரிசி கடத்தல் தடுப்பு வேட்டையில் ஒரே மாதத்தில் 8 டன்னுக்கு மேலான ரேசன் அரிசியை குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து உள்ளனர். சுமார் 80 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
நெல்லை மாவட்டத்தில், ஏழை எளிய மக்களின் பசியைப் போக்க அரசு வழங்கும் பொது விநியோகத் திட்ட ரேஷன் அரிசிக்கு கேரளாவில் மவுசு அதிகம். இதனால், நெல்லையில் இருந்து அருகிலுள்ள கேரள எல்லைக்கு ரேசன் அரிசி கடத்தப்படும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன. கடத்தல்காரர்களின் பேராசையால், நூற்றுக்கணக்கான ஏழைக் குடும்பங்களுக்கு செல்ல வேண்டிய உணவுப் பொருள், கால்நடைத் தீவனமாகவும் கள்ளச்சந்தையிலும் விற்கப்பட்டு அரசுத் திட்டத்தின் நோக்கமே சிதைக்கப்படும் அவலம் ஏற்பட்டுள்ளது.
கடத்தலின் முதல் படி, பொதுமக்களிடமிருந்தே தொடங்குகிறது. மாவட்டம் முழுவதும் உள்ள குடும்ப அட்டைதாரர்களிடமிருந்து, அவர்களின் தேவைக்குப்போக மீதமுள்ள ரேஷன் அரிசியை மிகக் குறைந்த விலைக்கு வாங்குவது கடத்தல்காரர்களின் முதல் உத்தி.
சேகரிக்கப்பட்ட அரிசியை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்லவும், பதுக்கி வைக்கவும் பல்வேறு வாகனங்கள் பயன்படுத்துகின்றனர். கடத்தப்பட்ட ரேசன் அரிசி கள்ள சந்தைகளில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதுதவிர பெரும்பான்மையான அரிசி, கால்நடை மற்றும் மாட்டுப் பண்ணைகளுக்கு தீவனமாக விற்கப்படுகிறது. சில இடங்களில், ரேஷன் அரிசியை மாவாக அரைத்து விற்பனை செய்யும் நோக்கத்துடனும் கடத்தல் நடைபெறுகிறது.
ரேசன் அரிசி கடத்தல் கும்பலுக்கு சிம்மசொப்பனமாக விளங்கும் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை, அக்டோபர் மாதம் முழுவதும் நெல்லை மாவடடத்தில் ஒரு ஓய்வில்லாத வேட்டையை நடத்தியது. ரகசியத் தகவல்களின் அடிப்படையில் மின்னல் வேகத்தில் நடத்தப்பட்ட இந்த தொடர் சோதனைகள், மாவட்டம் முழுவதும் பரவியிருந்த கடத்தல் கும்பலுக்கு பேரிடியாக அமைந்தது. ரேஷன் அரிசி கடத்தல் கும்பலின் மைய பகுதியே நாங்குநேரி மற்றும் வள்ளியூர்தான்.
கடந்த மாதம் நடந்த குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறையின் சோதனையில் பல்வேறு கடத்தல் சம்பவங்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. அம்பை, மன்னார்கோவில் விலக்கு அருகே கடந்த மாதம் 13ம் தேதி சஞ்சய், ஐயப்பன் ஆகியோர் 1000 கிலோ ரேசன் அரிசியை குடும்ப அட்டைதாரர்களிடமிருந்து குறைந்த விலைக்கு வாங்கி, கால்நடை தீவனத்திற்காக அதிக விலைக்கு விற்பனை செய்ததும், இச்சம்பவத்திற்கு அடுத்த நாளே நெல்லை ஜங்சன், ரயில்வே பிளாட்பார்ம் அருகில் கதிர்வேல் 150 கிலோ ரேசன் அரிசியை குடும்ப அட்டைதாரர்களிடமிருந்து வாங்கி, தனது வீட்டில் வளர்க்கும் கோழி மற்றும் ஆடுகளுக்கு தீவனமாகப் பயன்படுத்தியதும் தெரியவந்தது.
அதைத்தொடர்ந்து அதே மாதம் 16ம் தேதி மேலப்பாளையம், கால்நடை மருத்துவமனை அருகில் இசக்கியம்மாள் 150 கிலோ ரேசன் அரிசியை குடும்ப அட்டைதாரர்களிடமிருந்து வாங்கி, தனது கால்நடைகளுக்கு தீவனமாகப் பயன்படுத்தியதும், அதேமாதம் 17ம்தேதி அதிகாலை நெல்லை டவுண், பாறையடி தெருவில் மணிகண்டன் என்பவர் 1100 கிலோ ரேஷன் அரிசியை குடும்ப அட்டைதாரர்களிடமிருந்து வாங்கி, கால்நடை வளர்ப்பவர்களுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்ததும் தெரியவந்தது.
18ம் தேதி திம்மராஜபுரம், அம்மா உணவகம் அருகில் முத்துப்பாண்டி 250 கிலோ ரேசன் அரிசியை குடும்ப அட்டைதாரர்களிடமிருந்து வாங்கி, கால்நடை வளர்ப்பவர்களுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்ததும், அதே நாளில் சேரன்மகாதேவியில் இன்ஜினியரிங் கல்லூரி அருகில் முப்பிடாதி, வனராஜா ஆகியோர் 1050 கிலோ ரேசன் அரிசியை, குடும்ப அட்டைதாரர்களிடமிருந்து வாங்கி, மாட்டுப்பண்ணைகளுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்ய வாகனத்தில் கடத்திச் சென்றதும் தெரியவந்தது.
கடந்த மாதம் 21ம் தேதி கூடன்குளம், நான்கு வழிச்சாலை சந்திப்பு அருகில் சாமுவேல் என்பவர் 200 கிலோ ரேஷன் அரிசியை கூடங்குளம் அணுமின் நிலையத்தில் பணிபுரியும் வெளிமாநில தொழிலாளர்களுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்ததும், இச்சம்பவத்திற்கு மறுநாள் வள்ளியூர், யாதவர் வடக்கு தெரு செய்யது அலி என்பவர் 200 கிலோ ரேஷன் அரிசியை குடும்ப அட்டைதாரர்களிடமிருந்து வாங்கி, தனது கால்நடைகளுக்கு தீவனமாகப் பயன்படுத்தியதும் தெரியவந்தது.
கடந்த மாதம் 23ம் தேதி வள்ளியூர், பஸ் ஸ்டாப் அருகில் விஜயகுமார் 200 கிலோ ரேஷன் அரிசி குடும்ப அட்டைதாரர்களிடமிருந்து வாங்கி, கால்நடை வளர்ப்பவர்களுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்ததும், இச்சம்பவத்திற்கு மறுநாள் கல்லிடைக்குறிச்சி, ரயில்வே கேட் அருகில் புஜன்ராஜன் என்பவர் 200 கிலோ ரேசன் அரிசி குடும்ப அட்டைதாரர்களிடமிருந்து வாங்கி, தெரிந்த நபர்களின் கால்நடைகளுக்கு தீவனமாக வழங்கியதும் தெரியவந்தது.
கடந்த மாதம் 25ம் தேதி நாங்குநேரி, அம்பலம் பஸ் ஸ்டாப் அருகில் பட்டாணி என்பவர் 1000 கிலோ ரேஷன் அரிசியை, குறைந்த விலைக்கு குடும்ப அட்டைதாரர்களிடமிருந்து வாங்கி, கால்நடை வளர்ப்பவர்களுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்ததும், 26ம் தேதி வீரவநல்லூர், பஸ் ஸ்டாப் அருகில் கந்தவேல் 150 கிலோ ரேஷன் அரிசியை குடும்ப அட்டைதாரர்களிடமிருந்து வாங்கி, கால்நடை வளர்ப்பவர்களுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்ததும் தெரியவந்தது.
28ம் தேதி மேலப்பாளையம், செல்வகாத்ர் தெரு முகைதீன் அப்துல் காதர் 200 கிலோ ரேஷன் அரிசியை குடும்ப அட்டைதாரர்களிடமிருந்து வாங்கி, மாவு அரைத்து விற்பனை செய்வதற்காகப் பதுக்கி வைத்ததும், 29ம் தேதி நாங்குநேரி, பஸ் ஸ்டாப் அருகில் கந்தையா 200 கிலோ ரேஷன் அரிசியை செங்கல் சூளைகளில் பணிபுரியும் வெளிமாநில தொழிலாளர்களுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்ததும் தெரியவந்தது.
31ம் தேதி கக்கன் நகர், வாட்டர் டேங்க் அருகில் கணேசன் 200 கிலோ ரேஷன் அரிசி குடும்ப அட்டைதாரர்களிடமிருந்து வாங்கி, ஊரில் உள்ளவர்களுக்கு அதிக விலைக்கு விற்றதும், அதே நாளன்று இடிந்தகரை, சர்ச் அருகில் ஜான் புருனோ லியோன் 200 கிலோ ரேஷன் அரிசியை கூடங்குளம் பகுதியில் பணிபுரியும் வெளிமாநில தொழிலாளர்களுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்ததும் தெரியவந்தது. இந்த சம்பவங்கள் அதிகாரிகளின் இரவு பகல் பாராத அதிரடி சோதனைகள் மூலம் கண்டறியப்பட்டது.
அக்டோபர் மாத அதிரடியைத் தொடர்ந்து, நவம்பர் மாத தொடக்கத்திலேயே ஒரு பெரிய கடத்தல் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது. கடந்த 3ம் தேதி நாங்குநேரி அம்பலம் விலக்கு அருகே மணிகண்ட அரிகரன், மாயாண்டி மினி சரக்கு வாகனத்தில் 1,150 கிலோ ரேசன் அரிசியை கடத்த முயன்றனர். இந்த கடத்தலை முறியடித்து 1,150 கிலோ ரேசன் அரிசியையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். சமீபத்தில் நெல்லை உடையார்பட்டி, சந்திப்பு பகுதியில் சுமார் 1 டன் ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இந்த அரிசி சுற்றுவட்டார பகுதிகளில் குறைந்த விலைக்கு வாங்கி கேரளாவிற்கு கடத்தி திட்டமிடப்பட்டு இருந்தது விசாரணையில் தெரியவந்தது.
மொத்தத்தில் ஒரே மாதத்தில் 8 டன்னுக்கும் அதிகமாக ரேசன் அரிசியை குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து உள்ளனர். 80 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் அளித்த வாக்குமூலங்களின்படி, போதிய வருமானம் இல்லாதது, குடும்பச் செலவுகளைச் சமாளிக்க இயலாமை, மற்றும் எளிதாகப் பணம் சம்பாதிக்கும் ஆசை போன்றவையே இந்தக் குற்றச் செயலில் ஈடுபட முக்கியக் காரணங்களாக சொல்கிறார்கள். நெல்லை மாவட்டத்தில் மேலப்பாளையம், அம்பை, நாங்குநேரி, களக்காடு, சேரன்மகாதேவி உள்ளிட்ட இடங்களில் அதிகளவில் ரேசன் அரிசி கடத்தப்படுகிறது. கடந்த ஒரே மாதத்தில் மட்டும் ரேசன் அரிசி கடத்திய 8 குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஜாமீனில் வெளிவர முடியாத வகையில் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர் என குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்து உள்ளார்.









