அம்பாசமுத்திரம் சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் சட்டத்துறை அமைச்சருமான இசக்கி சுப்பையா, “நெல்லை என்றாலே தொல்லை எனும் அளவுக்கு முதலமைச்சர் பயத்தில் இருக்கிறார். 2026 சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலேயே இரட்டை இலை ஆட்சி அமையும்,” என்று தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது,
“மனோஜ் பாண்டியன் தனது சுயலாபத்திற்காக அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் சேர்ந்துள்ளார். அவர் அம்பாசமுத்திரம் தொகுதியில் போட்டியிட்டால் அது ஆரோக்கியமான போட்டியாக தான் அமையும். எம்ஜிஆர் கட்சியை தொண்டர்களை வைத்தே ஆரம்பித்தார், தலைவர்களை வைத்து அல்ல. நீக்கப்பட்டவர்கள் மீண்டும் திரும்பி வரலாம் . செங்கோட்டையனும் அதில் ஒருவராக இருப்பார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கையும் கட்சிக்கு பலனை தரும்.
அதிமுக மிகப்பெரிய இயக்கமாக வளர்ந்து வருகிறது. வாக்காளர் பட்டியலில் நடைபெறும் சிறப்பு தீவிர திருத்தம் மிகவும் தேவையானது. இரட்டை பதிவு மற்றும் இறந்தவர்களின் பெயர்களே நீக்கப்படுகின்றன. அதில் திமுகவிற்கு என்ன வருத்தம்? இது நாட்டின் நன்மைக்காகத்தான் செய்யப்படுகிறது. தமிழகத்தில் மீண்டும் இரட்டை இலை ஆட்சி நிச்சயம் அமைவது உறுதி,” என்றார்.









