விபத்தில் பலியான பாலிமர் டி.வி. நெல்லை செய்தியாளர் குடும்பத்துக்கு 13 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

compensation-of-rs-13-lakh-to-nellai-journalist-s-family-who-died-in-accident

நெல்லை, பெருமாள்புரம், என்ஜிஓ ஏ காலனியைச் சேர்ந்தவர் முத்துக்குமாரசாமி (53). இவர் , பாலிமர் டிவி சேனலில் நெல்லை செய்தியாளராக பணியாற்றி வந்தார். இவர், இன்சூரன்ஸ் நிறுவனத்தில் தனிநபர் விபத்துக் காப்பீட்டு பாலிசியும் எடுத்திருந்தார்.

கடந்த 2023ம் ஆண்டு நவம்பர் 21ம்தேதி இரவு 9 மணியளவில் முத்துக்குமாரசாமி தனது பைக்கில் வண்ணார்பேட்டையில் இருந்து தாழையூத்து நோக்கிச் சென்று கொண்டிருந்தார். அப்போது, சாலையின் குறுக்கே நாய் வந்ததால் நிலைதடுமாறி கீழே விழுந்து தலையில் பலத்த காயமடைந்தார்.

உடனடியாக , நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி அன்றைய தினம் இரவு 10.55 மணிக்கு உயிரிழந்தார். குடும்பத்தின் ஒரே வருமான ஆதாரமாக இருந்த முத்துக்குமாரசாமியின் மறைவால், அவரது மனைவி சூரிய கல்யாணி (50), மகன் சுப்பிரமணியன், மகள் ஹரிணி மற்றும் தாயார் முத்துலட்சுமி ஆகியோர் வறுமை நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

இதையடுத்து, காப்பீட்டுத் தொகையைப் பெறுவதற்காக சூரிய கல்யாணி, நாமினி என்ற முறையில், தேவையான அனைத்து ஆவணங்களுடன் காப்பீட்டு நிறுவனத்தில் விண்ணப்பித்துள்ளார். ஆனால், நிறுவனம் இழப்பீட்டுத் தொகையை வழங்காமல் காலம் தாழ்த்தி வந்தது. இதனால், சூரியகல்யாணி வக்கீல் கணேசன் மூலம் நெல்லை மாவட்ட நுகர்வோர் குறைதீர்ப்பு ஆணையத்தில் வழக்குத் தொடர்ந்தார். 'வழக்கின் போது, இறந்தவர் மது அருந்தியிருந்தார். அதனால் காப்பீட்டு கோரிய மனு நிராகரிக்கப்பட்டது' என்ற வாதத்தை காப்பீட்டு நிறுவனம் ஆணையத்தில் முன்வைத்தது.

ஆனால், சூரிய கல்யாணிக்கு ஆதரவாக ஆஜரான வக்கீல்கள் கணேசன், ஆறுமுகம், கவுரி ஆகியோர், 'விபத்தின்போது முத்துக்குமாரசாமி மது அருந்தியிருந்ததை உறுதிசெய்யும் வகையில் எந்தவிதமான ரத்தப் பரிசோதனையோ, சிறுநீர் பரிசோதனையோ செய்யப்படவில்லை. எனவே, அந்த வாதத்தை ஏற்றுக்கொள்ள முடியாது' என்று வாதிடப்பட்டது.

வழக்கை விசாரித்த நெல்லை மாவட்ட நுகர்வோர் குறைதீர்ப்பு ஆணையம் காப்பீட்டு நிறுவனம் சேவை குறைபாட்டுடன் செயல்பட்டதை உறுதி செய்தது. இதையடுத்து, இன்று (நவ.14)செய்தியாளர் முத்துக்குமாரசாமியின் குடும்பத்திற்கு சம்பந்தப்பட்ட இன்சூரன்ஸ் நிறுவனம், காப்பீட்டுத் தொகையான ரூ.12 லட்சத்து 70 ஆயிரத்தை 6.5% வட்டியுடன் வழங்க உத்தரவிட்டது.

மேலும், சேவை குறைபாடு மற்றும் மன உளைச்சலுக்காக ரூ.20 ஆயிரம் வழக்குச் செலவாக ரூ.10 ஆயிரமும் வழங்கவும உத்தரவிட்டது. இந்த தொகையை உத்தரவு கிடைத்த ஒரு மாதத்திற்குள் செலுத்த வேண்டும் . தவறினால் செலுத்த வேண்டிய மொத்தத் தொகைக்கும் ஆண்டுக்கு 9% வட்டியுடன் வழங்க வேண்டும் எனவும் தீர்ப்பில் திட்டவட்டமாகக் கூறப்பட்டுள்ளது.

இந்த தீர்ப்பு, உயிரிழந்த பத்திரிகையாளரின் குடும்பத்தினருக்கு பெரும் ஆறுதலாக அமைந்துள்ளது.