தியாகராஜநகர் சித்திவிநாயகர் கோவிலை அகற்ற முயல்கிறாரா நெல்லை பாஜக தலைவர் முத்துபலவேசம்?

is-nellai-bjp-leader-muthupalavesam-trying-to-remove-the-thiagarajanagar-siddhivinayak-temple

நெல்லை தியாகராஜநகர் பகுதியில் 50 வருடங்களுக்கும் மேலாக உள்ள சித்தி விநாயகர் கோவிலை அகற்ற நினைக்கும் பாஜக நிர்வாகிகளுக்கு எதிராக , அந்த பகுதி மக்கள் போஸ்டர்களை ஒட்டியுள்ளனர்.

நெல்லை ர் தியாகராஜ நகரின் பிரதான சாலையில் அரச மரத்தடியில் ஶ்ரீசித்தி விநாயகர் ஆலயம் அமைந்துள்ளது. நாள்தோறும் நூற்றுக்கணக்கானமக்கள் வந்து செல்லும், இந்த கோவிலில் இரண்டு வேளை பூஜைகளும் நடைபெறுகிறது. விநாயகர் கோவிலின் அருகிலேயே இருந்த வீடு, தற்போது இருக்கும் வணிக வளாகமாக மாறிவிட்டது. புதிய வணிவளகத்தில் திறக்கப்பட்ட கடைகளுக்காக கோவிலின் வாசற்பகுதியில் இருந்த மேற்கூரைகள் அகற்றப்பட்டு மாற்றம் செய்யப்பட்டது. கோவில் வாசல் பகுதியிலும் வணிக வளாகத்தினர் சில மாற்றங்களை செய்துள்ளனர். இதற்கு கோவில் நிர்வாகம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், வணிக வளாகத்தினர், சாலை ஓரமாக இருக்கும் சித்தி விநாயகர் கோவில் நெடுஞ்சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளது. எனவே , கோவிலை அகற்ற நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். புகார் மனுவின் அடிப்படையில், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கோவில் அகற்றுவதற்காக கோவில் கமிட்டியின் தலைவரான அண்ணாமலை என்பவருக்கு நோட்டீஸ் வழங்கியுள்ளனர்.

இது குறித்து அண்ணாமலை கூறுகையில், '' 50 வருடங்களுக்கு மேலாக மக்களுக்கு அருள் பாலித்து வரும் ஸ்ரீ சித்தி விநாயகர் கோவில் தனிப்பட்ட நபரின் சொத்தல்ல. இப்பகுதி மக்கள் பலரின் முயற்சியில் கோவில் கட்டப்பட்டது. அதன் அடிப்படையில் , கோவிலில் கமிட்டி உருவாக்கப்பட்டுள்ளது. இப்போது , கோவிலை அகற்றும் முயற்சியில் வணிக வளாகத்தினர் ஈடுபட்டுள்ளனர். இதற்காக , நோட்டீஸ் வந்துள்ளது. வணிக வளாகத்தின் உரிமையாளருக்கு ஆதரவாக பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் முத்துபலவேசம் உட்பட சிலர் உள்ளனர்'' என்கிறார்.

இந்த நிலையில், பாஜக நிர்வாகிகளை கண்டித்து, தியாகராஜ நகர் பகுதி முழுவதும் கண்டன போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. கோவிலுக்கு எதிராக செயல்படும் பாஜக நிர்வாகிகளுக்கு எதிராக அப்பகுதி மக்களே போஸ்டர் ஒட்டியுள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.