நெல்லை ஜங்ஷன் சென்ட்ரல் கபே ஓட்டலில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஊழியர்

employee-sexually-harassment-woman-at-nellai-junction-central-cafe-hotel

திருநெல்வேலியில், பிரபல ஓட்டல் ஊழியர் ஒருவர், தந்தையுடன் உணவு சாப்பிட வந்த இளம்பெண்ணுக்கு பாலியல்ரீதியாக சைகை செய்து தொந்தரவு கொடுத்துள்ளார். இதையடுத்து, அந்த ஊழியரை, பெண்ணின் தந்தை மற்றும் உறவினர்கள் சரமாரியாகத் தாக்கினர்.

நெல்லை ஜங்ஷன் சாலையில் சென்ட்ரல் கபே ஓட்டல் உள்ளது. கடந்த 3 நாட்களுக்கு முன்பு, இளம்பெண் ஒருவர் தனது தந்தையுடன் உணவு சாப்பிட வந்துள்ளார். அப்போது, ஹோட்டலில் காசாளராகப் பணியாற்றி வந்த ஊழியர் ஒருவர், அந்தப் பெண்ணைப் பார்த்துக் கண்ணடித்ததாகவும், ஆபாசமாக சைகை காட்டியதாகவும் தெரிகிறது. ஊழியரின் இந்த அநாகரிகமான செயலைக் கண்டு, இளம்பெண்ணும், அவரது தந்தையும் கடும் அதிர்ச்சியடைந்தனர்.

இதையடுத்து, அந்த பெண்ணின் தந்தை, ஊழியரைப் பிடித்து சரமாரியாகத் தாக்கினார். அருகில் இருந்த பெண்ணின் உறவினர்களும் ஓட்டல் ஊழியரை சராமரியாக அடித்துள்ளனர்.இந்தச் சம்பவம், ஹோட்டலில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. தற்போது, அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. தகவல் அறிந்த காவல்துறையினர் உடனடியாக உணவு விடுதிக்கு வந்து விசாரணை நடத்தினர். பாலியல் தொந்தரவு கொடுத்ததாகக் கூறப்படும் ஊழியர் திருநெல்வேலி டவுன் பகுதியைச் சேர்ந்த 42 வயதான கார்த்திக் என்பது தெரியவந்துள்ளது. சம்பவம் நடந்து மூன்று நாட்களுக்குப் பிறகு, கார்த்திக் மீது, பொது இடத்தில் அநாகரிகமாக நடந்துகொண்டதாக மூன்று பிரிவுகளின் கீழ் காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. ஊழியரைத் தாக்கிய இளம்பெண்ணின் தந்தை மற்றும் உறவினர்கள் மீதும் காவல்துறை வழக்குப் பதிவு செய்து, இரு தரப்பினரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.