இலவச வீடு வழங்க கோரி நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் திருநங்கைகள் போராட்டம்

Transgender-protest-at-Nellai-Collectorate-demanding-free-house


அம்பாசமுத்திரம் அருகே உள்ள தெற்கு பாப்பான்குளம் பகுதியைச் சேர்ந்த திருநங்கைகள் 15 பேர் தங்களுக்கு இலவச வீடு வழங்க கோரி நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் வட்டம் தெற்கு பாப்பான்குளத்தைச் சேர்ந்த 15 திருநங்கைகள் இலவச வீடு வழங்க கோரி மனு அளிக்க ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர். அவர்களை ஆட்சியர் அலுவலகத்திற்குள் செல்ல போலீசார் அனுமதிக்கவில்லை. இதையடுத்து ,ஆட்சியர் அலுவலக கதவுகளை தள்ளி விட்டு, அத்துமீறி அலுவலகத்திற்குள் நுழைந்த திருநங்கைகள், ஆட்சியர் அறை முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர் .

பின்னர், போலீசார் எச்சரித்தையடுத்து, ஆட்சியர் அலுவலக வாயில் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களிடத்தில் பேச்சு வார்த்தை நடத்தினர். எனினும் , அவர்கள் சமாதானம் ஆகவில்லை. இதுகுறித்து திருநங்கைகள் கூறுகையில், தெற்கு பாப்பான்குளத்தில் 15 திருநங்கைகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. எங்களுக்கு இலவச வீடு கட்டித்தருவதாகவும் உறுதி அளிக்கப்பட்டது. இது குறித்து பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. கலைஞர் கனவு இல்ல திட்டத்தின் கீழ் எங்களுக்கு வீடு கட்டுவதற்கு உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் 'என்றனர்

READ MORE ABOUT :