உடனிருந்து கவனித்துக்கொள்ள உறவினர்கள் யாரும் இல்லாததால், சிகிச்சையில் இருந்த முதியவர் ஒருவரை , நெல்லை அரசு மருத்துவமனை நிர்வாகம் வெளியே அனுப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம், மேலப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சண்முகராஜ் (50). மனைவி காலமாகிவிட்ட நிலையில், திருமணமாகி வெளியூரில் வசிக்கும் மகனும் மகளும் தந்தையை கைவிட்டுள்ளனர். வாதம் போன்ற காரணங்களால் நடக்க முடியாத நிலையில் இருந்த சண்முகராஜ், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டார்.
சிகிச்சையில் இருந்த சண்முகராஜுக்கு, உடனிருந்து கவனிக்க உறவினர்கள் யாரும் இல்லை. இதையடுத்து, "உங்களது சிகிச்சை முடிந்துவிட்டது. நீங்கள் கிளம்பலாம். ஏதேனும் உதவி தேவைப்பட்டால் நடமாடும் ஆம்புலன்சை பிடித்து மீண்டும் வாருங்கள்," என்று கூறி அவரை மருத்துவமனையில் இருந்து வெளியே அனுப்பியுள்ளனர்.
நடக்க முடியாத நிலையில் இருந்த சண்முகராஜ், மருத்துவமனை அருகேயுள்ள, சாலையோரத்தில் கிடந்துள்ளார். இது குறித்து, நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் டீன் ரேவதி பாலனிடம் கேட்ட போது , விநோதமான ஒரு விளக்கத்தை அளித்துள்ளார்.
"சண்முகராஜ், வார்டில் சிகிச்சையில் இருந்தபோது, அங்கிருந்த மற்ற நோயாளிகளின் உறவினர்களைத் தொந்தரவு செய்து தர்மம் கேட்டதால்தான் அவரை மருத்துவமனையிலிருந்து வெளியே அனுப்பினோம் என்று டீன் தெரிவித்துள்ளார்.
உடனிருந்து, கவனிக்க ஆள் இல்லை என்கிற காரணத்தை மறைத்து, தர்மம் கேட்டதால் ,வெளியே அனுப்பியதாக மருத்துவமனை நிர்வாகம் கூறியிருப்பது அதிர்ச்சியை தருவதாக சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். முதியவர் சண்முகராஜை மீட்டு, அவருக்குத் தேவையான மருத்துவ சிகிச்சையை வழங்க மாவட்ட நிர்வாகம் உடனடியாகத் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.










