திருநெல்வேலியில் கிரேன் ஏறியதில் பெண் ஒருவர் உடல் நசுங்கி இறந்து போனார்.
திருசெல்வேலி என்.ஜி.ஓ. காலனிக்கு அருகேயுள்ள மகிழ்ச்சிநகர் பகுதியில் வசிக்கும் நாராயணன் என்பவரின் மனைவி செல்வி (54). இவர், இன்று அப்பகுதியில் உள்ள ஒரு கடையில் காய்கறி வாங்கிக்கொண்டு சாலையோரம் நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது, அவ்வழியாக வந்த கிரேன் எதிர்பாராதவிதமாக செல்வி மீது மோதியது.

கிரேனை ஓட்டி வந்த ஓட்டுநர், காதில் ஹெட்போன் மாட்டிக்கொண்டு கவனக்குறைவாக வாகனத்தை இயக்கியுள்ளார். விபத்து நடந்ததையே அவர் அறியாத நிலையில், மோதிய பின்னரும் தொடர்ந்து இயக்கியுள்ளார். இதில், கிரேனின் சக்கரத்தில் சிக்கிய செல்வியின் உடல் சுமார் 20 அடி தூரம் வரை சாலையில் இழுத்துச் செல்லப்பட்டு, சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவல் அறிந்ததும், பெருமாள்புரம் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பலியான செல்வியின் சடலத்தைக் கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், விபத்தை ஏற்படுத்திய கிரேனின் ஓட்டுநரை போலீஸார் பிடித்துச் சென்றுள்ளனர். கவனக்குறைவாகவும், அஜாக்கிரதையாகவும் வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்தியதாக அவர் மீது வழக்குப் பதிவு செய்து, போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.









