நெல்லை மாவட்டம் களக்காடு பகுதியில் இன்று (20.11. 2025 ) பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக களக்காடு தலையணை சூழல் சுற்றுலா பகுதிகளில் நீர்வரத்து அதிகமாக உள்ளது. இதனால், துணை இயக்குனர் மற்றும் வன உயிரின காப்பாளர், களக்காடு (கூடுதல் பொறுப்பு) உத்தரவின்படி களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் ,களக்காடு வனக்கோட்டம், களக்காடு வனச்சரகத்திற்குட்பட்ட களக்காடு தலையணை சூழல் சுற்றுலா பகுதியில் இன்று முதல் மறு உத்தரவு வரும் வரை சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்படுகிறது. பார்வையிட மட்டும் அனுமதி அளிக்கப்படுகிறது.
தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள இலங்கை கடல் பகுதியில் நீடிக்கும் காற்று சுழற்சி காரணமாக நாளை இரவு முதல் தென் மாவட்டங்களில் மழையின் அளவு படிப்படியாக அதிகரிக்கும். தூத்துக்குடி ,நெல்லை, இராமநாதபுரம் ஆகிய தென் கடலோர மாவட்டங்களில் நாளை இரவு முதல் மழை அதிகரிக்கும். இந்த முறை நெல்லை, தென்காசி ,தூத்துக்குடி, இராமநாதபுரம் ஆகிய தென் மாவட்டங்கள் அதிக மழையை பெறும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.










