20 அடியில் இருந்து கீழே விழுந்ததில் ராதாகிருஷ்ணன் யானை மண்டை ஓடு நொறுங்கியது - உடற்கூறு ஆய்வில் அதிர்ச்சித் தகவல்கள்

radhakrishnan-elephant-s-skull-shattered-after-falling-20-feet-shocking-findings-in-autopsy

ஊட்டியின் முதுமலை புலிகள் காப்பகத்தில் (MTR) இருந்து கொண்டு வரப்பட்டு, திருநெல்வேலி மாவட்டக் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தின் (KMTR) மேல் கோதையாறு (Upper Kothayar) பகுதியில் விடப்பட்ட ராதாகிருஷ்ணன் என்ற 30 வயது மதிக்கத்தக்க ஆண் யானை, சுமார் 20 அடி பள்ளத்தில் தவறி விழுந்த விபத்தில் உயிரிழந்ததது. இடமாற்றத்திற்குப் பிறகு யானை ஆரோக்கியத்துடன் இருந்தது. நன்கு உணவு தேடியும், அணைப் பகுதியைச் சுறுசுறுப்புடன் சுற்றித் திரிந்தது. யானையின் ரேடியோ காலர் மூலம் கடைசியாக நவம்பர் 16ம் தேதி மாலை 3:30 மணி வரை சிக்னல் கிடைத்துள்ளது அதன் பின்னர் சிக்னல் கிடைக்கவில்லை.

ரேடியோ சிக்னல் கிடைக்காத இரண்டு நாட்களுக்குப் பிறகு, 18ம் தேதி காலை 9.00 மணியளவில் யானையின் உடல் கண்டெடுக்கப்பட்டது. தொடர்ந்து, 19ம் தேதி உடற்கூறு ஆய்வு நடந்தது.

யானை சாலையில் சடலமாகக் கிடந்த இடத்தில் இருந்து மேலே 8 மீட்டர் உயரத்தில் மென்மையான சாய்வான பகுதி இருப்பதும், அதன் மேற்புறத்தில் ஒரு பெரிய பாறை இருந்ததும் தெரிய வந்தது. இந்த பாறையில் யானை ஏறிய போது, கீழே விழுந்துள்ளது. உடனடியாக, மண்டை ஒடு நொறுங்கி இறந்துள்ளது. யானை, வேதனையால் உயிருக்கு போராடிய அடையாளங்கள் சம்பவ இடத்தில் இல்லை.

*உடற்கூறு ஆய்வின் முடிவுகள்

* யானையின் வலது தந்தம் உடைந்து முறிந்து காணப்பட்டது.
* தலை, வலது காதுப் பகுதி, வலது கண்ணைச் சுற்றிய பகுதி மற்றும் இடது இடுப்புப் பகுதி முழுவதும் கிழிந்த காயங்கள் மற்றும் சிராய்ப்புகள் காணப்பட்டன.
* தும்பிக்கை மற்றும் வாயிலிருந்து அதிக இரத்தம் வெளியேறியிருந்தது.
* யானையின் உடல் வீங்கிய நிலையில் இருந்தது.
* மின்சாரம் தாக்கியதற்கான எந்த ஆதாரமும் இல்லை.

*உட்புற ஆய்வு:*

* யானையின் உடல் ஆரோக்கியமான தசைகள் மற்றும் தோலுக்கு அடியில் கொழுப்புப் படிவுகளுடன் நல்ல நிலையில் இருந்தது.
* வலது நெற்றி, கண் பகுதி மற்றும் கன்ன எலும்புப் பகுதி (Zygomatic Region) உட்பட மண்டை ஓட்டின் பல இடங்களில் பல எலும்பு முறிவுகள் (Multiple and Compound fractures) ஏற்பட்டுள்ளன.
* நாசி துவாரங்கள் அதிக இரத்தம் மற்றும் ரத்த கட்டிகள் இருந்தன.
* உடலின் வலது பக்கத்தின் தோலுக்கு அடியில் அதிக அளவில் ரத்தப்போக்கு இருந்தது.

உயரத்தில் இருந்து தவறி விழுந்ததன் விளைவால் ஏற்பட்ட மண்டை ஓடு முறிவு, தீவிரமான உள் மற்றும் வெளிக்காயங்கள் மற்றும் கடுமையான ரத்தப்போக்கு காரணமாக யானை மரணமடைந்துள்ளது.

திருநெல்வேலி கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகத்தின் தலைவர் டாக்டர். முத்துக்குமார், உதவிப் பேராசிரியர் டாக்டர். குமார், (நோயியல் துறை) ஆகியோர் இந்த உடற்கூறு ஆய்வை மேற்கொண்டனர். அப்போது, களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தின் துணை இயக்குநர் ஸ்ரீகாந்த் , அரும்குளிகள் அறக்கட்டளையின் நிறுவனர் டாக்டர். மதிவாணன் மற்றும் ஆத்ரீ நிறுவனத்தைச் சேர்ந்த டாக்டர். தனிவேல், டான்ஜெட்கோ ஊழியர்கள் மற்றும் வனத்துறை ஊழியர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.