நெல்லை தீயணைப்பு அதிகாரி சரவணபாபுவை சிக்க வைத்தனரா? - சிசிடிவி காட்சியால் பரபரப்பு

did-they-trap-nellai-fire-officer-saravana-babu-cctv-footage-released

நெல்லை தீயணைப்பு துணை இயக்குனர் அலுவலகத்தில் நள்ளிரவில் ஒரு நபர் டூவீலரில் வந்து கவர்களை வைத்து செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.

திருநெல்வேலி மண்டல தீயணைப்பு துறை துணை இயக்குனர் அலுவலகம் என்.ஜி.ஓ.காலனியில் உள்ளது. தற்போது, துணை இயக்குனராக சரவண பாபு உள்ளார். கடந்த 18ம் தேதி அவரது அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டனர். அலுவலகத்தில் அவரது அறையில் அலமாரியில் பைல்களுக்கு இடையே வைக்கப்பட்ட 6 கவர்களில் 2 லட்சத்து24 ஆயிரத்து நூறு ரூபாய் பணம் இருந்ததாக போலீசார் பறிமுதல் செய்தனர். டிரைவரிடம் 27,400 இருந்ததாக கூறி பறிமுதல் செய்தனர்.

சரவணபாபு நேர்மையான அதிகாரியாக அறியப்பட்டவர். அவர் மீது யாரோ உள்நோக்கத்தில் பணத்தை வைத்து சிக்க வைக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கிடையே, என்.ஜி.ஓ., காலனி தீயணைப்பு துணை இயக்குனர் அலுவலகத்திற்கு அருகில் எதிர்புறம் உள்ள ஒரு வீட்டின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. அதில், சோதனை நடந்ததற்கு முன்றைய தினம், அதாவது நவம்பர் 17ம் தேதி இரவு 12:10 மணிக்கு காக்கி பேண்ட், நீல நிற சட்டை அணிந்த ஒரு நபர் டூவீலரில் தீயணைப்பு அலுவலகம் முன்பாக வருகிறார். டூவீலரை நிறுத்திவிட்டு ஒரு பையை எடுக்கிறார். அதிலிருந்து , சில கவர்கள் கீழே விழுகின்றன. பின்னர், அந்த நபர் அந்த பையுடன் அலுவலகத்திற்குள் சென்று வைத்துவிட்டு 10 நிமிடங்களில் மீண்டும் வெளியேறுகிறார். தீயணைப்பு படை வீரரை போலவே இருக்கும் அந்த நபர் ஏன் நள்ளிரவு அங்கு செல்ல வேண்டும் ? அவர் யார் ? என்ன கொண்டு வைத்தார்? என்பது குறித்து விசாரணை நடத்தினால் இந்த வழக்கில் துப்பு துலங்க வாய்ப்புள்ளது.

READ MORE ABOUT :