உலக மீனவர் தினம் இன்று கொண்டாடப்படுகிறது . இதை முன்னிட்டு கன்னியாகுமரி கடற்கரை கிராமங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது . ராமன் துறை கடற்கரை கிராமத்தில் மீனவர் காங்கிரஸ் சார்பில் மீனவர் தினம் கொண்டாடப்பட்டது . இந்த நிகழ்ச்சியில் கடலில் பூக்கள் தூவி கடல் அன்னைக்கு மரியாதை செய்யப்பட்டது . தொடர்ந்து. கேக் வெட்டி ஏழைகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் , காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் ராஜேஷ் குமார் ஆகியோர் வழங்கினர்.

தொடர்ந்து ,மிடாலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற ராஜேஷ் குமார் எம்எல்ஏ பேசுகையில், 'கடலுக்கு மீன் பிடிக்க சொல்லும் மீனவர்கள் பத்திரமாக கரைக்குத் திரும்புவார்களா? என்கிற சூழல்தான் இப்போதும் உள்ளது. மழை மற்றும் புயல் காலங்களில் மீன் பிடிக்க செல்லும் மீனவர்கள் பாதிக்கப்படும் போது, அவர்களை காப்பாற்ற மரைன் ஆம்புலன்ஸ் கொண்டுவர வேண்டும் என்று கோரிக்கை நீண்ட நாட்களாக இருந்து வருகிறது .

இந்த கோரிக்கையை மத்திய அரசு நிறைவேற்றி தர வேண்டும் . கடலில் காணாமல் போகும் மீனவர்களை கண்டுபிடிக்க ஹெலிகாப்டர் மூலம் தேடும் பணிகளை நடத்த ஹெலிகாப்டர் தளம் அமைக்க வேண்டும். இது சம்பந்தமாக சட்டமன்றத்தில் குரல் எழுப்பி வருகிறோம். மாநில அரசும் இந்த திட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசை வலியுறுத்தி வருகிறது . ஆனால் , மத்திய அரசு சுணக்கம் காட்டுகிறது. காணாமல் போகும் மீனவர்கள் இறந்ததற்கான சான்றிதழ் 7 வருடங்களுக்குப் பிறகு வழங்கப்படுகிறது . இந்த பிரச்னைகள் எல்லாம் விரைவில் முடிவுக்கு வர வேண்டும் என்று தெரிவித்தார்.







