பாட்டில் தண்ணீர் ரூ.20 : தாமிபரணி தண்ணீர் லிட்டருக்கு 1 பைசா: நீதிமன்றம் சாட்டையடி

is-it-worth-one-paisa-if-you-take-a-liter-of-water-in-tamipharani-madurai-court-questions

திருநெல்வேலி மாவட்டத்தின் உயிர்நாடியாக கருதப்படும் தாமிரபரணி ஆற்றில் இருந்து தொழில் மற்றும் குடிநீர் தேவைக்காக தண்ணீர் எடுக்கும் அரசுத் துறையினரும், தனியார் நிறுவனங்களும் நீர் பயன்பாட்டு வரித் தொகை ரூ, 246 கோடியை செலுத்தாமல் பாக்கி வைத்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

ஒரு லிட்டர் ஒரு பைசாவுக்கு எடுத்தும் நாமம் போட்ட நிறுவனங்கள்

திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த முத்தலங்குறிச்சி காமராசு என்பவர் தாக்கல் செய்துள்ள இந்த வழக்கு, நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன் மற்றும் பி. புகழேந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன், இன்று விசாரணைக்கு வந்தது. தாமிரபரணி ஆற்றிலிருந்து தண்ணீரை எடுத்துப் பயன்படுத்தும் சில தொழில் நிறுவனங்கள் வரியைச் செலுத்தாமல் பெரிய தொகையைப் பாக்கி வைத்துள்ளதாக மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. வரி பாக்கி வைத்திருக்கும் நிறுவனங்கள் மற்றும் அரசு துறையினரின் நிலுவைத் தொகையின் விவரம் பின்வருமாறு:

* இந்தியா சிமெண்ட் லிட்.,* சங்கர் நகர் - நிலுவைத் தொகை: ரூ. 3,83,12,674*

* டி.சி.டபிள்யூ லிட்.,* சாஹுபுரம் - நிலுவைத் தொகை: ரூ. 28,06,98,36*

3 எம்.ஜி.டி திட்டம், TWAD (தூத்துக்குடி) - நிலுவைத் தொகை: ரூ. 10,15,33,121*

2எம்.ஜி.டி திட்டம், TWAD (தூத்துக்குடி) - நிலுவைத் தொகை: ரூ. 2,04,34,44,554*

வி.வி. மினரல்ஸ், இராதாபுரம் - நிலுவைத் தொகை: ரூ. 8,86,942*

அர்ஜுன் பல்ப் அண்ட் பேப்பர் (இந்தியா) பிரைவேட் லிட். - நிலுவைத் தொகை: *ரூ.1,18,800*

இதில், தமிழ்நாடு நீர்வளத் துறையின் (TWAD) இரண்டு முக்கிய குடிநீர்த் திட்டங்களே ரூ. 214 கோடிக்கும் அதிகமாகப் பாக்கி வைத்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, பொதுப்பணித்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 'அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு லிட்டர் ஒன்றுக்கு ஒரு பைசா என்ற விகிதத்தில் நீர் வரி வசூலிக்கப்படுகிறது 'எனஅதிர்ச்சித் தகவலை தெரிவித்தார்.

இதை கேட்ட நீதிபதிகள் , "தனியார் நிறுவனங்கள் ஒரு லிட்டர் தண்ணீரை ரூ. 20-க்கு விற்கிறது. ஆனால், தாமிரபரணி தண்ணீர் ஒரு லிட்டருக்கு ஒரு பைசா தான் இன்னமும் வசூலிக்கிறீர்களா?" எனச் சரமாரிக் கேள்வி எழுப்பினர். 20 ஆண்டுகளுக்கு முன் நிர்ணயிக்கப்பட்ட தொகையை ஏன் இன்னும் உயர்த்தவில்லை?"* என்றும் கேள்வி எழுப்பப்பட்டது.

அதோடு நீதிபதிகள், தாமிரபரணி ஆற்றில் இருந்து நீர் எடுக்கும் நிறுவனங்கள் குறித்து விரிவான தகவல்களை அளிக்கக் கோரி, நெல்லை மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையாளர் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்குப் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளனர். தொடர்ந்து , வழக்கை ஒத்திவைப்பதாக நீதிபதிகள் அறிவித்தனர்.

*நீதிமன்றம் கேட்கும் முக்கிய விவரங்கள்:*

1. தாமிரபரணி ஆற்றில் இருந்து எத்தனை நிறுவனங்கள் தண்ணீர் எடுக்கின்றன?

2. ஒரு நாளைக்கு எவ்வளவு அளவு தண்ணீர் எடுக்கப்படுகிறது?

3. இதுவரை எவ்வளவு எடுக்கப்பட்டுள்ளது?

4. அதற்காக நிர்ணயித்த தொகை எவ்வளவு?

5. எவ்வளவு தொகை வசூலிக்கப்பட்டுள்ளது?

*மனுதாரரின் முக்கிய கோரிக்கைகள்*

மேலும், மனுதாரரான முத்தாலங்குறிச்சி காமராசு '1998-ஆம் ஆண்டு அரசாணைப்படி ஆயிரம் லிட்டருக்கு ரூ.1.50 என நிர்ணயிக்கப்பட்டுள்ள நீர் கட்டணத்தை, தற்போதைய சூழல், தொழில் மயமாக்கல் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகளைக் கருத்தில்கொண்டு உயர்த்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். அத்துடன், ஆற்றில் இருந்து நீர் எடுக்கும் அல்லது ஆற்றின் பகுதிகளை ஆக்கிரமித்துள்ள நிறுவனங்களை ஆக்கிரமிப்பாளர்களாகக் கருதி, சட்டப்படி ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட வேண்டும்' என்றும் கோரியுள்ளார்.