பாளையங்கோட்டையில் சீமான் கைதா ? : பணகுடியில் 400 மாடுகள் சிறைப்பிடிப்பு!

seeman-arrested-in-palayamkottai

மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள வன உரிமைச் சட்டத்தை (Forest Rights Act, 2006) மீட்டெடுக்கக் கோரி, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் அறிவிக்கப்பட்டிருந்த 'மலையேறி மாடு மேய்க்கும் போராட்டத்துக்கு திருநெல்வேலி மாவட்டக் காவல்துறை அனுமதி மறுத்ததோடு, தடையை மீறிச் செல்ல முயன்றவர்களைக் கைது செய்தது.

தமிழ்நாடு மேய்ச்சல் சமூகக் கூட்டமைப்பினருடன் இணைந்து நாம் தமிழர் கட்சி இந்தப் போராட்டத்தை அறிவித்தது. பாரம்பரியமாக வனப்பகுதிகள் மற்றும் மேய்ச்சல் நிலங்களில் ஆடு, மாடுகளை மேய்க்கும் மேய்ச்சல் சமூக மக்களுக்கு வனத்துறையால் இழைக்கப்படும் அநீதியை எதிர்த்தும், அவர்களின் வாழ்வாதார உரிமைகளை அங்கீகரிக்கும் 2006 வன உரிமைச் சட்டத்தை மீட்டெடுக்கக் கோரியும் இந்த போராட்டம் அறிவிக்கப்பட்டது. மேலும், இன்று (நவம்பர் 22, 2025) காலை 10 மணி அளவில் பணகுடியில் வன உரிமை கிராம சபையின் அறிவிப்புப் பதாகையை திறக்கவும் திட்டமிடப்பட்டிருந்தது.

போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், தடையை மீறி போராட்டத்திற்குச் செல்லக்கூடும் என்பதால் காவல்துறை தீவிர நடவடிக்கையில் இறங்கியது.

* போராட்டத்தில் ஈடுபடுத்த இருந்த 400-க்கும் மேற்பட்ட மாடுகள் காவல் துறையினரால் சிறைப்பிடிக்கப்பட்டு வேறு இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டன.
* போராட்டக்காரர்களில், மாடுகளின் உரிமையாளர்கள் 3 பேர் உட்பட, மொத்தம் 20 பேர் கைது செய்யப்பட்டனர்.
* கைது செய்யப்பட்டவர்களில், தமிழ்நாடு மேய்ச்சல் சமூக கூட்டமைப்பின் தலைவர் ராஜீவ் காந்தி, செயலாளர் கென்னடி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளும் அடங்குவர்.
* கைது செய்யப்பட்ட அனைவரும் பணகுடியில் உள்ள MMPS தனியார் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
* தடையை மீறுபவர்களைக் கைது செய்து அடைத்து வைப்பதற்காக, பணகுடி தனியார் மண்டபத்தில் 200-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் குவிக்கப்பட்டுள்ளனர்.

*சீமான்'மண்டபத்திலேயே சிறை'*

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான், போராட்ட நேரத்தில் திருநெல்வேலியில்தான் இருந்தார். அவரை, பாளையங்கோட்டையில் உள்ள ஒரு மண்டபத்தில் போலீஸார் தடுத்து வைத்துள்ளனர். சீமான் வெளியேறாத வண்ணம் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

இது குறித்துக் காவல்துறை வட்டாரத்தில் விசாரித்தபோது, "சீமான் கைது செய்யப்படவில்லை. ஆனால், அனுமதி மறுக்கப்பட்ட பணகுடி போராட்டத்திற்குச் செல்ல முயன்றால் அவர் கைது செய்யப்படுவார்" என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தடையை மீறி அறவழியில் போராட்டம் நடத்த முயன்ற நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் கைது செய்யப்பட்டதற்குக் கடும் கண்டனம் தெரிவித்து, மேய்ச்சல் சமூக மக்களின் வாழ்வாதாரப் போராட்டத்தை அரசு ஒடுக்குவதாகச் சீமான் குற்றம் சாட்டியுள்ளார்.

READ MORE ABOUT :