தொடர் மழையால் தாமிரபரணியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுத்தமல்லி உறை கிணறுகள் மூழ்கின. இதனால் பாதுகாப்பு கருதி மோட்டார்கள் நிறுத்தப்பட்டுள்ளதால் நெல்லை நகரில் குடிநீர் இன்றி பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.
தாமிரபரணியில் வெள்ளம்
திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த 5 நாட்களாக இடைவிடாது கனமழை பெய்து வருகிறது. அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில், உபரி நீர் திறக்கப்பட்டுள்ளதால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
நெல்லையின் பிரதான குடிநீர் ஆதாரமாக விளங்கும் சுத்தமல்லி நீரேற்று நிலையத்தை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. அங்குள்ள உறை கிணறுகள் மற்றும் மோட்டார்கள் இருக்கும் பகுதிகள் முழுவதும் நீரால் சூழப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் மோட்டார்களை இயக்கினால் அவை பழுதாகிவிடும் அபாயம் உள்ளது. இதன் காரணமாக, சுத்தமல்லியில் இருந்து வரும் குடிநீர் சப்ளை அடியோடு நிறுத்தப்பட்டுள்ளது. வெள்ளம் சற்று வடிந்த பிறகு, மோட்டார்களை ஆய்வு செய்த பின்னரே மீண்டும் தண்ணீர் திறக்கப்படும் எனத் தெரிகிறது. அதுவரை பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டதால், திருநெல்வேலி நகரின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த 5 நாட்களாக குழாய்களில் தண்ணீர் வரவில்லை. இதனால், பொதுமக்கள் சமையல் மற்றும் அன்றாடத் தேவைகளுக்குக் கூட தண்ணீர் இன்றி குடங்களுடன் அலையும் சூழல் ஏற்பட்டுள்ளது. தற்போது மழைக்காலம் என்பதால் தொற்றுநோய்கள் பரவும் அபாயமும் உள்ளது. எனவே, திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் ஆகியவை இணைந்து போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு, பொதுமக்களுக்கான குடிநீர் விநியோகத்தை உடனடியாக சீரமைத்திட வேண்டும் என அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நிரந்தர தீர்வு வேண்டும்
இதுகுறித்துப் பொதுமக்கள் கூறும்போது, "ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலங்களில் இதுபோன்ற குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது. இதைத் தவிர்க்க வருங்காலங்களில் மோட்டார்களை வெள்ளம் எட்டாத உயரமான, பாதுகாப்பான இடங்களில் அமைத்து இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், மின்சாரம் துண்டிக்கப்பட்டாலும் தடையின்றி குடிநீர் ஏற்றும் வகையில், மோட்டார்கள் இருக்கும் இடங்களிலேயே ஜெனரேட்டர் வசதிகளையும் அரசு செய்து தர வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தனர்.









