நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்தது. குறிப்பாக பாபநாசம், காரையாறு, சேர்வலாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் , அகஸ்தியர் அருவி மற்றும் மணிமுத்தாறு அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலா பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பாபநாசம் வனச்சோதனைச் சாவடியும் தற்காலிகமாக மூடப்பட்டது.
தொடர் மழை காரணமாக பாபநாசம் வனச்சோதனைச் சாவடியில் இருந்து காரையாறு செல்லும் மலைச்சாலையில் ஆங்காங்கே மண்சரிவு ஏற்பட்டது. இதனை வனத்துறையினர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
மேற்குத் தொடர்ச்சி மலையில் காரையாறு அணையின் அடிவாரத்தில் சின்ன மயிலாறு கிராமம் உள்ளது. இங்கு சுமார் 85 காணி பழங்குடியின குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் காரையாற்றில் இருந்து சின்ன மயிலாறு பகுதிக்குச் செல்ல தாற்காலிக மரப்பாலத்தையே பயன்படுத்தி வந்தனர். தற்போது. அணை நிரம்பி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளதால், வெள்ளப்பெருக்கு காரணமாக ஆற்றைக் கடக்க முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர்.
பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள் மற்றும் வேலைக்குச் செல்வோர் தங்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர். "எங்கள் பகுதிக்குத் தாமிரபரணி ஆற்றைக் கடந்து செல்ல பாலம் கட்டித் தருவதாகக் கூறினார்கள். ஆனால் இதுவரை எந்த வேலையும் நடக்கவில்லை. இனியாவது விரைந்து பாலம் கட்டித் தர வேண்டும்" என காணி பழங்குடியின சங்க செயலாளர் சின்ன மயிலாறு கணேசமூர்த்தி கோரிக்கை விடுத்துள்ளார்.
*3 நாட்களாக பஸ் நிறுத்தம் - மக்கள் குற்றச்சாட்டு*
இதற்கிடையில், மழையைக் காரணம் காட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் மாஞ்சோலை பகுதிக்கு அரசுப் பேருந்து சேவை நிறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், "இன்று மழை ஏதும் பெய்யவில்லை. வெயில் அடிக்கத் தொடங்கிவிட்டது. ஆனால், அரசுப் பேருந்தை மட்டுமே நம்பியுள்ள எஸ்டேட் மக்கள் கடந்த மூன்று நாட்களாக கீழே வர முடியாமலும், கீழே இருந்து மேலே செல்ல முடியாமலும் தவிக்கின்றனர். உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் அவதிப்படுகிறோம். பேருந்து ஏன் இயங்கவில்லை எனக் கேட்டால், 'மக்கள் யாரும் கேட்கவில்லை' என அதிகாரிகள் அலட்சியமாகப் பதிலளிக்கின்றனர்" என்று குற்றம் சாட்டினர்.
இதுகுறித்து நெல்லை மண்டல போக்குவரத்துக் கழக பொது மேலாளர் கூறுகையில், "மலைப்பகுதியில் பெய்த கடும் மழை காரணமாகவும், பாதுகாப்புக் கருதியுமே கடந்த இரண்டு நாட்களாகப் பேருந்துகள் இயக்கப்படவில்லை. கனமழையால் மலைச்சாலையில் ஆங்காங்கே மண்சரிவு மற்றும் சாலை சேதங்கள் ஏற்பட்டுள்ளன.
போக்குவரத்து கழகம் சார்பில் ஓட்டுநர்கள் மோட்டார் சைக்கிளில் சென்று அந்தச் சாலைகளின் தன்மையை ஆய்வு செய்து வருகின்றனர். பயணிகளின் பாதுகாப்பு தான் முக்கியம். சாலைகள் சரி செய்யப்பட்டு, பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டவுடன் உடனடியாக மீண்டும் பேருந்து போக்குவரத்து தொடங்கப்படும்" என்று தெரிவித்தார்.









