கல்லிடைக்குறிச்சியில் தெருநாய்களின் அட்டகாசம் : 3 சிறுமிகளை கடித்து குதறின

stray-dogs-attack-in-kallidaikurichi-3-girls-bitten-and-mauled


திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சியில் வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த 3 சிறுமிகளை தெருநாய் கடித்து குதறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கூட்டம் கூட்டமாகச் சுற்றித்திரியும் நாய்களால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரவே அச்சப்படும் சூழல் உருவாகியுள்ளது.


திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த சில வாரங்களாகவே தெருநாய்களின் தொல்லை அதிகரித்து வருகிறது. வீதிகள் தோறும் 10 முதல் 15 நாய்கள் கொண்ட கும்பல் கூட்டம் கூட்டமாகச் சுற்றித் திரிகின்றன. இதனால் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள், வேலைக்குச் செல்லும் பெண்கள் மற்றும் முதியவர்கள் சாலையில் தனியாக நடந்து செல்லவே அச்சப்படுகின்றனர்.

இந்த நிலையில், கல்லிடைக்குறிச்சி பேரூராட்சிக்குட்பட்ட குமாரசாமி கோவில் தெருவில், மூன்று சிறுமிகள் தங்கள் வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த ஒரு தெருநாய், திடீரென எதிர்பாராத விதமாக அந்தச் சிறுமிகள் மீது பாய்ந்து கடித்தது.

நாய்க்கடியால் அலறித்துடித்த சிறுமிகளின் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், நாயை விரட்டிவிட்டு சிறுமிகளை மீட்டனர். படுகாயமடைந்த மூன்று சிறுமிகளும் உடனடியாக கல்லிடைக்குறிச்சி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு, அங்கு அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கல்லிடைக்குறிச்சி மட்டுமல்லாது, அருகிலுள்ள அம்பாசமுத்திரம் நகராட்சிப் பகுதிகளிலும் நாய்களின் எண்ணிக்கை பன்மடங்கு பெருகிவிட்டதாகப் புகார்கள் எழுந்துள்ளன. இருசக்கர வாகனங்களில் செல்பவர்களை நாய்கள் துரத்துவதாகவும், இதனால் வாகன ஓட்டிகள் கீழே விழுந்து விபத்துக்குள்ளாகும் சம்பவங்களும் அடிக்கடி நிகழ்வதாகப் பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, "தெருநாய்களின் அட்டகாசத்தால் குழந்தைகளை வெளியே அனுப்பினாலே பயமாக இருக்கிறது. தற்போது மூன்று சிறுமிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இனியும் இதுபோன்ற அசம்பாவிதங்கள் நிகழாமல் இருக்க, கல்லிடைக்குறிச்சி பேரூராட்சி மற்றும் அம்பாசமுத்திரம் நகராட்சி நிர்வாகம் உடனடியாகத் தலையிட வேண்டும். பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், சுற்றித்திரியும் தெருநாய்களைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அதிகாரிகளுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

READ MORE ABOUT :