கவுன்சிலர் கூட ஆகவில்லை.. அதற்குள் உலகத்தையே ஆள முடியுமா? - விஜயை விமர்சித்த நயினார்!

You-haven-t-even-become-a-councilor-can-you-rule-the-world-by-then-Nayinar-criticizes-Vijay

திருநெல்வேலியில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். டெல்லி பயணம், அதிமுக மூத்த தலைவர் செங்கோட்டையன் கட்சி தாவல் விவகாரம், நடிகர் விஜய்யின் அரசியல் பிரவேசம், மற்றும் 2026 தேர்தல் கூட்டணி ஆகியவை குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அவர் விரிவாகப் பதிலளித்தார்.

*டெல்லி பயணம் அரசியல் காரணமா?*
டெல்லி பயணம் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த நயினார் நாகேந்திரன், "நான் யாரையும் சந்திப்பதற்காக டெல்லி செல்லவில்லை. அது என்னுடைய சொந்தப் பயணம். நேற்றுமுன்தினம் மதியம் சென்றுவிட்டு நேற்று காலையில் திரும்பிவிட்டேன். இதில் அரசியல் உள்நோக்கம் எதுவும் இல்லை," என்று விளக்கமளித்தார்.

*செங்கோட்டையன் விலகல் - அதிமுக வாக்கு வங்கி சிதறுமா?*

முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அதிமுகவிலிருந்து விலகி விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்திருக்கிறாரே, இது அதிமுக-பாஜக கூட்டணிக்கு பின்னடைவா என்றும் கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் பதிலளிக்கையில்.

"செங்கோட்டையன் 1977 முதல் அரசியலில் இருக்கும் 50 ஆண்டுகால மூத்த தலைவர். அவர் எம்ஜிஆர், ஜெயலலிதா மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் அமைச்சரவையில் பணியாற்றியவர். அவர் தற்போது விஜய்யின் கட்சியில் இணைந்துள்ளார். ஆனால், அதிமுகவுக்கும் தனி வாக்கு வங்கி உள்ளது. ஒரு தலைவர் விலகிச் செல்வதால் அந்த வாக்கு வங்கி அப்படியே அவருடன் செல்லுமா? என்பது கேள்விக்குறிதான். தேர்தலுக்குப் பின்னரே அதன் தாக்கம் தெரியும். இதனால் பாஜக கூட்டணிக்கு எந்தப் பாதிப்பும் இல்லை," என்றார்.

*2026-ல் கூட்டணி ஆட்சி வருமா?*

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் 2026-ல் கூட்டணி ஆட்சி அமையும் எனக் கூறியது குறித்த கேள்விக்கு, "கருத்து சொல்ல அனைவருக்கும் உரிமை உண்டு. ஆனால் எஜமானர்களான வாக்காளர்களே அதை முடிவு செய்வார்கள். 2006-ல் திமுக மைனாரிட்டி அரசை அமைத்ததைத் தவிர, தமிழக வரலாறு முழுவதும் தனிப்பெரும்பான்மை ஆட்சியைத்தான் மக்கள் தேர்வு செய்துள்ளனர்," என்றார்.

பொங்கல் பரிசு ரூ.5000


திமுக அரசு குறித்துப் பேசிய நயினார், "திமுக ஆட்சிக்கு வந்த பிறகு சொத்துவரி மற்றும் மின்கட்டணத்தை 300% உயர்த்தியுள்ளது. சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. ஆனால், பொங்கல் பண்டிகை வரவுள்ள நிலையில், கடந்த முறை ரூ.1000 கொடுத்தார்கள். இந்த முறை மக்கள் ரூ.5000 எதிர்பார்க்கிறார்கள். முதலமைச்சர் என் தொகுதிக்கு பாலம், ரோடு, கல்லூரி என நிறைய நன்மைகளைச் செய்துள்ளார். அதேபோல் மக்களுக்கும் பொங்கல் பரிசாக ரூ.5000 வழங்க வேண்டும் என்று நானும் கேட்டுக்கொள்கிறேன்,*" என்று கூறினார்.

"விஜய் இன்னும் கவுன்சிலர் கூட ஆகல.."


விஜய்யின் தவெக திமுகவிற்கு மாற்றாக உருவெடுக்குமா என்ற கேள்விக்கு, "பாஜக 1600-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏக்கள், 300-க்கும் மேற்பட்ட எம்பிக்களைக் கொண்ட உலகின் மிகப்பெரிய கட்சி. தம்பி விஜய் இப்போதுதான் கட்சி ஆரம்பித்திருக்கிறார். அவர் இன்னும் ஒரு கவுன்சிலர் கூட ஆகவில்லை. எடுத்தவுடனேயே 'லாங் ஜம்ப்' செய்து உலகத்தையே தாண்டுவேன் என்று சொல்வது சரியாக இருக்காது. தேர்தலில் நின்று தன் பலத்தை நிரூபித்த பிறகு பேசலாம். எம்ஜிஆர் கட்சி ஆரம்பிக்கும் முன்பே எம்எல்ஏவாகவும், திமுகவின் முகமாகவும் இருந்தார். ஆனால் விஜய் இப்போது நடிகராக மட்டுமே உள்ளார்," என்று ஒப்பிட்டுப் பேசினார்.

*அதிமுக உள்கட்சி விவகாரம் & பாஜகவின் நிலைப்பாடு*
ஓபிஎஸ் மற்றும் செங்கோட்டையன் போன்றவர்கள் பாஜகவை நம்பி ஏமாந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டை நயினார் மறுத்தார். "அதிமுகவில் இருந்துகொண்டு பாஜகவை நம்பினோம் என்று சொல்வது எப்படிப் பொருத்தமாக இருக்கும்? செங்கோட்டையன் விலகலின் பின்னணியில் பாஜக இருப்பதாகத் திருமாவளவன் சொல்வது தவறானது. பாஜக பின்னணியில் இருந்தால் அவர் ஏன் தவெக-விற்கு செல்ல வேண்டும்? பாஜகவிற்கே வந்திருக்கலாமே?" என்று பதிலடி கொடுத்தார்.

மேலும், எடப்பாடி பழனிசாமியின் போக்கு காரணமாகவே நிர்வாகிகள் வெளியேறுகிறார்களா என்ற கேள்விக்கு, "இங்கே என் அருகில் பாஜக நிர்வாகி கருப்பு முருகானந்தம் உள்ளார், இவரைப் பற்றி நான் கருத்து சொல்ல முடியும். அடுத்த கட்சிகளின் உள்கட்சி விவகாரங்கள் குறித்துப் பேசுவது நாகரிகமாக இருக்காது," என்று நாசூக்காகத் தவிர்த்தார்.

READ MORE ABOUT :