நெல்லை மாவட்டம் வள்ளியூரில் சமீபத்தில் பெய்த வடகிழக்கு பருவமழையால் நீர்நிலைகள் நிரம்பி வழிகின்றன. குறிப்பாக, வள்ளியூர் கண்டிகைப்பேரி குளம் தனது முழுகொள்ளளவை எட்டி, வானத்தை பிரதிபலித்து, தண்ணீர் வெள்ளிபோல ரம்மியமாக காட்சியளிக்கிறது.
நிரம்பி வழியும் குளத்தில், ஸ்பாட் பில்ட் பெலிகன் (Spot-billed Pelican) எனப்படும் கூழைக்கடா ஒன்று ஒய்யாரமாக வலம் வருகிறது. கூட்டமாக இல்லாமல், தனியாக நீந்தித் திரியும் இந்த கூழைக்கடாவை, "கண்டிகைப்பேரி குளத்தின் நீர்ப்பரப்பை ஆளும் தனிக்காட்டு ராஜா என்று இயற்கை ஆர்வலர்கள் வர்ணிக்கின்றனர்.
கூழைக்கடாவைத் தொடர்ந்து, பெரிய நீர்க்காகங்கள் (Cormorants) கூட்டமாக முகாமிட்டுள்ளன. மேலும், நீண்ட கழுத்துடைய பாம்புத்தாரா (Oriental Darter) பறவையும் குளத்தில் தென்படுவது காண்போரை ஈர்க்கிறது. இதற்கிடையில், வள்ளியூர் அருகே உள்ள சூட்சிகுளம் பகுதியில் மழைக்காலப் பறவையான கொண்டைக்குயில் (Jacobin Cuckoo) தென்பட்டது பறவை ஆர்வலர்களுக்குக் கூடுதல் மகிழ்ச்சியை அளித்துள்ளது.

பறவைகளைத் தாண்டி, இங்கே மற்றொரு இயற்கை அதிசயம் நிகழ்ந்துள்ளது. இங்குள்ள செடிகள் முழுவதும் போர்வை போர்த்தியது போல சிலந்திகளின் கூட்டு வலை (Communal Spider Web) காணப்படுகிறது. பொதுவாக சிலந்திகள் தனித்தனியாக வாழ்ந்தாலும், இவை ஒரு காலனியாக இணைந்து, வேட்டையாடவும், தங்களைப் பாதுகாக்கவும் பிரம்மாண்டமான வலைகளை பின்னியுள்ளன. இது இயற்கையின் வியத்தகு நிகழ்வாகும்.
தற்போது நிரம்பி வழியும் கண்டிகைப்பேரி குளம், மேலும் பல வலசைப் பறவைகளின் வருகைக்காக ஏங்கித் தவிப்பது போல் காத்திருக்கிறது. இந்த மழைக்கால இயற்கை எழிலைக் கண்டு அப்பகுதி மக்களும், இயற்கை ஆர்வலர்களும் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளனர்.









