நெல்லை தொகுதி : விலகும் நயினார்... சீட்டுக்காக காய் நகர்த்தும் திமுக , அதிமுக முக்கியப் புள்ளிகள்

who-are-the-candidates-from-dmk-admk-in-nellai-constituency

நெல்லை சட்டமன்ற தொகுதியில் இருந்து போட்டியிடாமல் , வேறு தொகுதிக்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மாறப்போவதாக தகவல் வெளியானதையடுத்து, திமுக, அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் நெல்லை தொகுதியை கேட்டு தலைமைக்கு நெருக்கடி கொடுக்க தொடங்கியுள்ளனர்.

திருநெல்வேலி சட்டமன்றத் தொகுதி தென் மாவட்ட அரசியலில் முக்கியமானது. இந்த தொகுதியில் பல ஆண்டுகளாக திமுக , அதிமுக கட்சிகள் வெற்றி கண்டு வந்தன. நகர்ப்புற மக்களோடு கிராம மக்களும் கலந்த தொகுதி இது. இதனால், முடிவுகளை எப்போதும் யாராலும் கணிக்க முடியாது. சமுதாய ரீதியிலான வாக்குகள் வெற்றிக்கு காரணமாக அமையலாம். சைவ வெள்ளாளர் , தேவேந்திர குல வேளாளர், யாதவர் சமூக வாக்குகள் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் சக்திகள் எனலாம். கடந்த 2021 ம் ஆண்டு நடந்த தேர்தலில் முதல் முறையாக திராவிட இயக்கங்களை பின்தள்ளி, பா.ஜ.கவின் நயினார் நாகேந்திரன் வெற்றி பெற்றார். 70 ஆண்டு கால தமிழக தேர்தல் வரலாற்றில் முதல்முறையாக நெல்லையில் பா.ஜ.க.விடம் திராவிட கட்சிகள் தோல்வியை சந்தித்தன .

இதற்கிடையே, 2026ம் ஆண்டு தேர்தலில் நயினார் நாகேந்திரன் திருநெல்வேலி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட போவதில்லை என்கிற தகவல் அரசல் புரசலாக பரவியது. ஏனென்றால், நெல்லை தொகுதியில் எந்த சிட்டிங் எம்.எல்.ஏவும் தேர்தலில் வெற்றி கண்டதே இல்லை. கடந்த 2016ம் ஆண்டு சிட்டிங் எம்.எல்.ஏ. வான ஏ.எல்.எஸ் .லட்சுமணன் நயினார் நாகேந்திரனிடத்தில் தோல்வியடைந்ததும் குறிப்பிடத்தக்கது. அதோடு, நெல்லை தொகுதியில் திமுக தோற்றால், நிர்வாகிகளின் பதவிகள் பறிக்கப்படும் என வேறு திமுக தலைவர் ஸ்டாலின் எச்சரித்துள்ளார். இதனால், நயினாரை தோற்கடித்தே தீர வேண்டுமென திமுகவினர் கங்கணம் கட்டிக் கொண்டிருப்பார்கள். இவற்றையெல்லாம் தாண்டி, நயினாருக்கு நெருக்கமான ஜோசியர் ஒருவர், 'நெல்லை இந்த முறை காலை வாரிவிடும்.... விலகி விடுங்கள்' என்று எச்சரித்தாராம். இதையெல்லாம் கணக்கு போட்டுப் பார்த்த, நயினார், எதற்கு வம்பு என்று கருதி நெல்லை தொகுதியை கை விட்டு நாங்குநேரி பக்கம் கரை ஒதுங்க முடிவு செய்துள்ளாராம். நயினார் நெல்லையை விட்டு விலகி விட்டால், திராவிட கட்சிகள் தங்களுக்கு வெற்றி எளிதாக கிடைக்கும் என்று கருதுகின்றனர்.

இதனால், திமுக, அதிமுகவினருக்குள் நெல்லை தொகுதியை கைப்பற்ற பலத்த போட்டி நிலவுகிறது. திருநெல்வேலி சட்டமன்ற தொகுதி பல்வேறு சமூக மக்கள் வாழும் பகுதி. வேட்பாளர்கள் தேர்வு சமூக ரீதிலியில்தான் பெரும்பாலும் இருக்கும். இந்த முறை , திமுக சார்பில் போட்டியிடுவதற்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மாலை ராஜா , நெல்லை மாநகர செயலாளர் சுப்பிரமணியன், நெல்லை மேயர் ராமகிருஷ்ணன், கிறிஸ்தவ பணியாளர் நல வாரிய தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான விஜிலா சத்யானந்த் போன்றவர்கள் நெல்லை தொகுதி சீட் கேட்டு தலைமையை நச்சரிக்க தொடங்கியுள்ளனர். அதோடு, நெல்லை மாவட்டத்தைச் பூர்வீகமாக கொண்ட பிரபல ஊடகவியலாளர் ஒருவரும் சீட் கேட்பதாக தகவல்.

அதிமுக சார்பிலும் நெல்லை சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுவதற்கு பல்வேறு முக்கிய புள்ளிகள் காய்கள் நகர்த்தி கொண்டிருக்கின்றனர். நெல்லை மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா, அதிமுக அமைப்பு செயலாளர் சுதா பரமசிவம் , மாவட்ட அவை தலைவர் பரணிசங்கர லிங்கத்தின் மகன் பரணி ஆறுமுகம் என்ற கார்த்திக் போன்றவர்கள் பெயர்களும் அடிபட்டு வருகிறது. மானூர் ஒன்றிய பெருந்தலைவராக இருந்த கல்லூர் வேலாயுதத்தின் பெயரும் உத்தேச பட்டியலில் இருப்பதாக சொல்லப்படுகிறது .

கடந்த தேர்தலில் நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில் 16,000 வாக்குகளில் தோல்வியை தழுவிய கணேச ராஜா இந்த முறை எப்படியாவது நெல்லை சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்று சட்டமன்றத்திற்கு செல்ல வேண்டும் என்ற முனைப்பில் இப்போதே பணிகளை தொடங்கி விட்டாராம். ஆனால், த.வெ.க இளைஞர் பட்டாள துள்ளளுடன் களத்தில் இருப்பதால், அதிமுகவில் இளைஞர்களுக்கே நெல்லை தொகுதியை ஒதுக்க வேண்டுமென்றும் பரவலாக கோரிக்கை எழுந்துள்ளது.

இதனால், நெல்லையின் இரட்டை குழல் துப்பாக்கி என அழைக்கப்படும் சுதா பரமசிவம் சங்கரலிங்கம் அல்லது சங்கரலிங்கத்தின் மகன் பரணி ஆறுமுகம் என்ற கார்த்திக்கை களத்தில் இறக்க இருப்பதாகவும் சொல்லப்படுகிறது . வழக்கறிஞர் அன்பு அங்கப்பன் போன்ற அதிமுக நிர்வாகிகளும் தங்களுக்கு நெருக்கமானவர்களை கொண்டு மேலிடத்தில் சீட்டுக்காக காய் நகர்த்தி வருகின்றனர்.

தமிழகத்தில் மற்ற கட்சியினர் சீட்டுக்காக அல்லாடி வரும் நிலையில், நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் மட்டும் தங்கள் தேர்தல் பணியை செவ்வனே செய்து கொண்டிருக்கின்றனர். எப்போதுமே, வேட்பாளர்களை முதலில் அறிவிக்கும் நாம் தமிழர் கட்சியின் சார்பில் நெல்லை தொகுதி வேட்பாளராக சத்யா அறிவிக்கப்பட்டுள்ளார். தற்போது, அவர் மட்டுமே களப் பணியில் தீவிரம் காட்டி வருகிறார்.

ஆனால், ஜெயம் யாருக்கு... அந்த நெல்லையப்பனுக்கே வெளிச்சம்!

READ MORE ABOUT :