மணிமுத்தாறுவில் 25 காட்டு யானைகள் முகாம்: விளைநிலங்கள் நாசம் - விடிவு காலம் எப்போது?

elephants-destroyed-farms-near-manimuthar

திருநெல்வேலி மாவட்டம் மணிமுத்தாறு அணை மற்றும் அதன் அடிவாரக் கிராமங்களில் காட்டு யானைகளின் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வனப்பகுதியிலிருந்து வெளியேறிய சுமார் 25 யானைகள் கொண்ட கூட்டம், விளைநிலங்களுக்குள் புகுந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.

மணிமுத்தாறு அணை அடிவாரத்தில் உள்ள விவசாய நிலங்களுக்குள் புகுந்த இந்த யானைக்கூட்டம், அறுவடைக்குத் தயாராக இருந்த பல ஏக்கர் நெற்பயிர்களை மிதித்து துவம்சம் செய்தன. மேலும், அப்பகுதியில் இருந்த ஏராளமான தென்னை மரங்களை வேரோடு சாய்த்தும், குருத்துகளைத் தின்றும் நாசப்படுத்தியுள்ளன. இதனால் விவசாயிகளுக்குப் பல லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாகவே இப்பகுதியில் யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகம் உள்ளது. பகல் நேரங்களில் வனப்பகுதிக்குள் இருக்கும் யானைகள், இரவு நேரங்களில் ஊருக்குள் புகுந்து விடுவதால், கிராம மக்கள் இரவு நேரங்களில் வீட்டை விட்டு வெளியே வர அஞ்சி வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர். குறிப்பாக, தோட்டங்களுக்குக் காவல் காக்கச் செல்லும் விவசாயிகள் உயிர் பயத்துடன் இருக்க வேண்டிய சூழல் நிலவுகிறது.

"வருடம் முழுவதும் கஷ்டப்பட்டு வளர்த்த பயிர்கள் ஒரே இரவில் யானைகளால் அழிக்கப்படுவதைப் பார்க்கும்போது மனவேதனையாக உள்ளது. கடன்பட்டு விவசாயம் செய்த எங்களுக்கு இப்போது பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது" என விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

வனத்துறையினர் உடனடியாகத் தலையிட்டு, விளைநிலங்களுக்குள் யானைகள் புகாத வண்ணம் அகழிகளைச் சீரமைக்க வேண்டும் அல்லது மின்வேலிகளை முறையாக அமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

யானைகள் நடமாட்டம் குறித்துத் தகவலறிந்த வனத்துறையினர், யானைகளை மீண்டும் அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பொதுமக்கள் யாரும் இரவு நேரங்களில் தனியாக விளைநிலங்களுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

READ MORE ABOUT :