நெல்லை - திருச்செந்தூர் நெடுஞ்சாலையில் 'மரணக் குழி': முறையாக மூடப்படாத குடிநீர் குழாய் பள்ளத்தால் விபத்துகள் ஏற்படுவதாக மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
திருநெல்வேலி - திருச்செந்தூர் தேசிய நெடுஞ்சாலையில், கிருஷ்ணாபுரம் அருகே குடிநீர் குழாய் பணிக்காகத் தோண்டப்பட்ட பள்ளம் முறையாக மூடப்படாததால், விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஒப்பந்ததாரரின் அலட்சியத்தால் தினந்தோறும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர்.
திருநெல்வேலி - திருச்செந்தூர் பிரதான சாலையில் கிருஷ்ணாபுரம் பகுதியில் உள்ள ஒரு தொழிற்சாலை அருகே, குடிநீர் குழாய் இணைப்பிற்காகச் சாலையின் குறுக்கே ஒரு புறத்திலிருந்து மறுபுறம் வரை ராட்சத பள்ளம் தோண்டப்பட்டது. சில நாட்களுக்கு முன்பு இந்த குடிநீர் குழாய் பதிக்கும் பணிகள் நிறைவடைந்தன.

குழாய் பதிக்கும் பணி முடிந்தவுடன், தோண்டப்பட்ட குழி முறையாக சிமெண்ட் கலவை அல்லது தார் கொண்டு மூடப்படவில்லை. மாறாக, மேலோட்டமாக மணலைப் போட்டு மூடிவிட்டு ஒப்பந்ததாரர்கள் சென்று விட்டனர். இந்தப் பிரதான சாலையில் தொடர்ச்சியாக கனரக வாகனங்கள் மற்றும் பேருந்துகள் சென்று வருவதால், மணல் போட்ட பகுதி உள்வாங்கி சாலையில் திடீரெனப் பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது.
அதிவேகமாகச் செல்லும் வாகனங்கள் இந்தப் பள்ளத்தில் விழுந்து நிலைதடுமாறி விபத்துக்குள்ளாகின்றன. குறிப்பாக இரவு நேரங்களில் வரும் இருசக்கர வாகன ஓட்டிகள் இந்தப் பள்ளத்தில் விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர். "சாலை சீரமைக்கப்படும் என்று எதிர்பார்த்தோம், ஆனால் ஒப்பந்ததாரரின் மெத்தனப் போக்கால் இது மரணக் குழியாக மாறியுள்ளது" என வாகன ஓட்டிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து இப்பகுதி மக்கள் கூறுகையில், "குடிநீர் குழாய் பதித்த ஒப்பந்ததாரர் சாலையை முறையாகச் சீரமைக்காமல் அப்படியே விட்டுச் சென்றுவிட்டார். இதனால் தினமும் விபத்துக்கள் நடக்கின்றன. ஏதேனும் உயிர்ச்சேதம் ஏற்படும் முன் நெடுஞ்சாலைத் துறையும், மாவட்ட நிர்வாகமும் உடனடியாகத் தலையிட்டு இந்தப் பள்ளத்தைச் சீரமைக்க வேண்டும்" என வலியுறுத்தியுள்ளனர்.







