நெல்லை மாவட்டம் சீவலப்பேரி கால்நடைச் சந்தை 40 ஆண்டுகளுக்கு பின் இன்று திறக்கப்பட்டது. இந்த நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் சுகுமார் கலந்து கொண்டு சந்தையை திறந்து வைத்தார். வாரம்தோறும் புதன்கிழமை சந்தை செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் சீவலப்பேரியில் தென் மாவட்டங்களில் மிகப்பெரிய கால்நடை சந்தை செயல்பட்டு வந்துள்ளது . பல்வேறு காரணத்தால் சீவலப்பேரிச் சந்தை 40 ஆண்டுகளுக்கு முன் மூடப்பட்டு விட்டது. நெல்லை மாவட்டத்தில் மேலப்பாளையம் மற்றும் அழகியபாண்டியபுரம் அருகில் உள்ள ரெட்டியார்பட்டி தூத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரம், கயத்தாறு ஆகிய பகுதிகளில் தற்போது சந்தை நடந்து வருகிறது. இந்த பகுதியைச்சேர்ந்த விவசாயிகள் , பொதுமக்கள் கால்நடைகளை விற்பதற்காகவும், வாங்கவும் இந்த சந்தைகளுக்கே செல்லவேண்டிய நிலை இருந்துவந்தது.
எனவே சீவலப்பேரி ஆடு, மாடு கால்நடை சந்தையை திறக்க வேண்டும் என விவசாயிகள், பொதுமக்கள், வியபாரிகள் தொடர்ந்து பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்துவந்தனர். இவர்களின் கோரிக்கையை ஏற்று சீவலப்பேரி சந்தையை திறக்க அரசு உத்தரவிட்டது, இதனையடுத்து , 40 ஆண்டுகளுக்கு பின் சீவலப்பேரியில் ஆடு, மாடு கால்நடை சந்தை திறப்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சுகுமார் கலந்து கொண்டு சந்தையை ரிப்பன்வெட்டி திறந்து வைத்து , குத்துவிளக்கேற்றி சந்தையை தொடங்கி வைத்தார். சந்தையில் ஆடுகள், மாடுகள், கோழி ஆகியவற்றை விற்பனைக்காக வியாபாரிகள் கொண்டுவந்துள்ளனர். விற்பனையும் நடந்து வருகிறது .
வாரம் தோறும் புதன்கிழமை சந்தை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 40 ஆண்டுகளுக்கு பின் சீவலப்பேரியில் சந்தை திறக்கப்பட்டுள்ளதால் தென்காசி, விருதுநகர், தூத்துக்குடி, கன்னியாகுமரி, மதுரை என தென்மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் பொதுமக்கள், வியபாரிகள் பயன்பெறுவார்கள். சந்தை திறப்பு நிகழ்வில் நெல்லை கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கிரகம்பெல், பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றிய தலைவர் முரளி, துணை தலைவர் குமரேசன், மாவட்ட ஊராட்சி தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ், திமுக பொதுக்குழு உறுப்பினர் பரமசிவ ஐயப்பன், ஒன்றிய செயலாளர்கள் போர்வெல்கணேசன், சுபாஷ்தங்கப்பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.







