நெல்லை மாவட்டத்தின் கடைகோடி மீனவ மக்களின் கண்ணீர் போராட்டம்... அரசு கண்டு கொள்ளுமா?

fisherman-and-people-staged-a-massive-protest-iin-thomaipuram

நெல்லை மாவட்டத்தின் தென் கோடி முனையான விஜயாபதி அருகே தோமையார்புரம் கடற்கரை மீனவ கிராமத்தில் தூண்டில் வளைவு அமைக்க வேண்டி மீனவர்கள் கருப்பு கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

நெல்லை மாவட்டத்தில் மொத்தம் 10 மீனவ கிராமங்கள் அமைந்துள்ளன. இங்குள்ள மீனவர்கள் நாட்டுப் படகு மூலம் மீன் பிடித்து வருகின்றனர். மாவட்டத்தின் தென்கோடி கடைசி கிராமமான விஜயபாதி பஞ்சாயத்துக்குட்பட்ட மீனவ கிராமம் தோமையார்புரம் ஆகும். இக்கிராமத்தில் 160 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கூடங்குளம் அணு உலை பாதுகாப்பு கருதி அமைக்கப்பட்ட கடற்கரை தடுப்பு சுவர்கள் மற்றும் அருகிலுள்ள ஊர்களில் அமைக்கப்பட்ட தூண்டில் வளைவுகளால் தோமையார்புரம் ஊரில் கடற்கரையில் கடல் அரிப்பு அதிகமாகியுள்ளது. எனவே கடற்கரையில் தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் என கடந்த 8 ஆண்டுகளாக மக்கள் பிரதிநிதிகள் மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் மனுக்கள் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை .

இதனால், வாழ்வாதாரத்தை இழந்த 40க்கும் குடும்பங்கள் குடும்பத்தை விட்டு வெளியேறி வேறு ஊர்களுக்கு சென்று விட்டனர். கடந்த இரண்டு ஆண்டுகளில் தமிழ்நாடு முதலமைச்சர்,சபாநாயகர், மீன்வளத்துறை அமைச்சர் நெல்லை மாவட்ட ஆட்சியர் உட்பட பல்வேறு மக்கள் பிரதிநிதிகளையும் நேரில் சந்தித்து இந்த கிராம மக்கள் மனுக்களை கொடுத்துள்ளனர். ஆனாலும், பலன் இல்லை. மனுக்கள் மீது எந்தவித நடவடிக்கையையும் எடுக்காததை கண்டித்து தோமையார்புரம் கிராம மக்கள் இன்று கடலுக்கு மீன் பிடிக்க செல்லாமல் கடலுக்குள் இறங்கி தங்கள் படகுகளில் கருப்பு கொடி கட்டி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்தில் பெற்றோர்களுடன் பள்ளி குழந்தைகளும் பள்ளி சீருடையில் பங்கேற்றனர்.

போராட்டத்தில் பங்கேற்ற தோமையார்புரத்தை சேர்ந்த எல்டின் கூறுகையில் , ''பல ஆண்டுகளாக தூண்டில் வைளவு அமைக்க மனு கொடுத்து வருகிறோம். முதலமைச்சர் ஸ்டாலின், எங்களது பொறுப்பு அமைச்சர், மீன்வளத்துறை அமைச்சர் அனிதா. ராதாகிருஷ்ணன், நெல்லை மாவட்ட ஆட்சியர், தமிழ்நாடு சபாநாயகர் அப்பாவு, தூத்துக்குடி எம்.பி கனிமொழி உட்பட பல்வேறு மக்கள் பிரதிநிதிகளை சந்தித்து மனுக்களை கொடுத்தும் எந்த தீர்வும் கிடைக்கவில்லை. இதனால் தான் இன்று எங்கள் ஊர் மக்கள் போராட்டத்தை முன்னெடுத்து இருக்கிறோம்.

போராட்டம் ஒன்றுதான் எங்களுக்கான தீர்வாக நினைக்கிறோம். எங்கள் ஊரை இந்த அரசு எதற்காக புறக்கணிக்கிறது என்று தெரியவில்லை. இந்த ஊரில் 2000-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வந்தனர். இன்று மக்கள் தொகை குறைந்து 600 முதல் 700 மக்கள் வரை மட்டுமே வசிக்கின்றோம். வாழ்வாதாரம் இல்லாத காரணத்தினால் 40 குடும்பத்தினர் கேரளா, நாகப்பட்டினம், பாண்டிச்சேரி, உட்பட பல இடங்களுக்கு புலம்பெயர்ந்து சென்று விட்டனர். வரும் 20ஆம் தேதி தொடங்கவுள்ள தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தில், எங்களது கிராமத்திற்கு தூண்டில் வளைவு அமைக்க அறிவிப்பு வெளியிட வேண்டும். எங்களுக்கு தீர்வு வராத பட்சத்தில் மேலும் மேலும் எங்களது போராட்டம் தொடரும். அடுத்த கட்டமாக சாலை மறியல் போராட்டத்தையும் முன்னெடுப்போம் . அடுத்ததாக வருகின்ற தேர்தலையும் புறக்கணிப்போம். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் எங்களுடைய ரேஷன் கார்டு, ஆதார் கார்டை ஒப்படைக்க இருக்கிறோம். எங்களுக்கு வாழ்வாதாரம் தான் முக்கியம் '' என்றார்.

READ MORE ABOUT :