திருநெல்வேலி ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரியின் பொறுப்பு முதல்வர் சுமிதா, மாணவி ஒருவரை ஆபாசமாகப் பேசி மிரட்டிய புகாரில் இன்று பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
திருநெல்வேலி ராணிமேரி அண்ணா கல்லூரியில் முதலாம் ஆண்டு முதுநிலை பயின்று வரும் மாணவி ஒருவரிடம், பொறுப்பு முதல்வர் சுமிதா மற்றும் அவரது கணவர் பொன்னுதுரை ஆகியோர் சமூகவலைத்தளம் வாயிலாக ஆபாசமாகப் பேசியும், மிரட்டல் விடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாகப் பாதிக்கப்பட்ட மாணவி திருநெல்வேலி மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.

புகாரையடுத்து போலீசார், வழக்குப் பதிவு செய்து பொறுப்பு முதல்வர் சுமிதா மற்றும் அவரது கணவர் பொன்னுதுரை ஆகிய இருவரையும் அதிரடியாகக் கைது செய்தனர். பின்னர் அவர்கள் நீதிமன்ற ஜாமினில் விடுவிக்கப்பட்டனர். ஜாமீனில் வெளி வந்த சுமிதா, அடுத்த நாளே ராணிமேரி கல்லூரியில் மாணவர்களுக்கு அரசு சார்பில் லேப்டாப் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று அதிர்ச்சியை ஏற்படுத்தினார். இதற்கு, மாணவர்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
குற்றச்சாட்டுக்குள்ளான சுமிதா மீது உடனடியாகத் துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவிகள் மற்றும் பல்வேறு தரப்பினர் தொடர்ந்து போராட்டங்களிலும் ஈடுபட்டு வந்தனர். தொடர்ந்து, சுமிதா இன்று சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். மாணவிகளின் பாதுகாப்பு மற்றும் கல்வி நிறுவனத்தின் கண்ணியத்தைக் காக்க வேண்டிய அவசியத்தைக் கருத்தில் கொண்டு, உயர்கல்வித்துறை தற்போது அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த சஸ்பெண்ட் உத்தரவை மண்டல இணை இயக்குநர் அலுவலகம் பிறப்பிக்கவில்லை. மாறாக, விவகாரத்தின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு சென்னை மாநில கல்லூரி கல்வி இயக்குநர் கார்மேகம் நேரடியாக உத்தரவை பிறப்பித்துள்ளார்.

பணியிடை நீக்க நடவடிக்கையைத் தொடர்ந்து, கல்லூரியில் புதிய பொறுப்பு முதல்வர் நியமிக்கப்படவுள்ளார். மாணவிகளுக்கே அச்சுறுத்தலாக விளங்கிய முதல்வர் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கையை கல்லூரி மாணவிகள் வரவேற்றுள்ளனர்.







