"கேட்பதை விட பார்ப்பது மனித மனதில் ஆழமாகப் பதியும்" என்ற தத்துவத்தின் அடிப்படையில், திருநெல்வேலி பாளையங்கோட்டையில் உள்ள புனித இஞ்ஞாசியார் கல்வியியல் கல்லூரி மற்றும் திருநெல்வேலி புறநகர் ரோட்டரி சங்கம் இணைந்து இன்று "கல்வி மூலம் அதிகாரம் பெறுதல் மற்றும் பாதுகாப்பிற்கான ஆதாரம்" என்ற தலைப்பில் நடைபெற்றநிலைக்கண்காட்சி பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது.
சமூகத்தில் நிலவும் பல்வேறு சவால்கள் மற்றும் மாற்றங்கள் குறித்து மாணவிகள் ஐந்து குழுக்களாகப் பிரிந்து தத்ரூபமான காட்சிகளை உருவாக்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். குறிப்பாக, சமூக நல்லிணக்கம், கல்வியின் அவசியம், சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு ஆகியவற்றுடன் சமகாலத்தின் மிக முக்கியத் தேவைகளான பெண்கள் முன்னேற்றம் மற்றும் போதை இல்லா சமுதாயம் ஆகிய கருப்பொருள்களில் மாணவிகள் சிலைகளைப் போல அமர்ந்து காட்சிகளை விளக்கினர்.

பெண்கள் முன்னேற்றம் குறித்த அரங்கில், 'முல்லை' குழுவைச் சேர்ந்த மாணவிகள் வரலாற்றுச் சாதனையாளர்களான ராணி லட்சுமி பாய், சாவித்திரிபாய் புலே மற்றும் முத்துலட்சுமி ரெட்டி ஆகியோரின் பங்களிப்பை நினைவுகூர்ந்தனர். மேலும், பெண்களின் அன்றாட வாழ்க்கையில் அவர்கள் சந்திக்கும் சவால்கள் மற்றும் அவர்களுக்கு அரணாக இருக்கும் சட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது:
* குடும்ப வன்முறைத் தடைச் சட்டம் (2005)
* வரதட்சணைத் தடைச் சட்டம் (1961)
* போக்சோ (POCSO) சட்டம் (2012)
* ஈவ் டீசிங் (Eve-teasing) தடைச் சட்டம் (1977)
* குழந்தைத் திருமணத் தடைச் சட்டம் (2006)
ஒரு பெண் ஆசிரியராகப் பணிபுரிந்தாலும், வீட்டில் சமையல், குழந்தைப் பராமரிப்பு, முதியோர் பராமரிப்பு எனப் பல பொறுப்புகளைத் தாங்குவதையும், அதே சமயம் சட்ட ரீதியான உரிமைகளைத் தெரிந்து வைத்திருப்பதன் அவசியத்தையும் மாணவிகள் தத்ரூபமாகச் சித்தரித்துக் காட்டினர்.

கண்காட்சியின் மற்றொரு முக்கிய அங்கமாக "போதை இல்லா சமுதாயம்" குறித்த விழிப்புணர்வு அமைந்திருந்தது. இது குறித்துக் கணிதத் துறை மாணவி அனு பூபனா பேசுகையில், "போதைப் பழக்கத்தால் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் சீரழிவது மட்டுமல்லாமல், ஒரு குடும்பமே எவ்வாறு பாதிக்கப்படுகிறது என்பதை நிலைக்கண்காட்சி மூலம் விளக்கியுள்ளோம். மென்பொருள் நிறுவனங்களில் நிலவும் மன அழுத்தம் காரணமாகப் போதைக்கு அடிமையாவதும், அதனால் ஏற்படும் சாலை விபத்துகள் மற்றும் உயிரிழப்புகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது," எனத் தெரிவித்தார்.
75 சதவீத அறிவியல் சார்ந்த ஆராய்ச்சி முடிவுகளின்படி, காட்சிகளாகப் பார்க்கும் விஷயங்கள் மாணவர்களின் மனதில் எளிதில் பதியும் என்பதால், இத்தகைய 'நிலைக்கண்காட்சி' முறையைத் தேர்ந்தெடுத்ததாகக் கல்லூரி நிர்வாகம் மற்றும் ஆசிரியர்கள் தெரிவித்தனர். இந்நிகழ்வில் முதன்மை விருந்தினராகத் திருநெல்வேலி மாநகரக் காவல் உதவி ஆணையர் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் கலந்துகொண்டு மாணவிகளின் முயற்சியைப் பாராட்டினர்.

பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் இந்தக் கண்காட்சியைப் பார்வையிட்டனர். புனித இஞ்ஞாசியார் கல்வியியல் கல்லூரி மாணவிகளின் இந்த நூதன முயற்சி திருநெல்வேலி மக்களிடையே வரவேற்பைப் பெற்றது.








