பாளையங்கோட்டை மத்திய சிறையில் மாநகர போலீசார் திடீர் சோதனை

City-police-conduct-surprise-raid-at-Palayamkottai-Central-Prison

பாளையங்கோட்டை மத்திய சிறையில் தண்டனை கைதிகள் மற்றும் விசாரணை கைதிகள் என சுமார் 1,200-க்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர். அங்கு தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் கஞ்சா, செல்போன் பயன்படுத்தப்படுகிறதா? என்று அடிக்கடி சிறை காவலர்கள் கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

இதுதவிர மாநகர போலீசாரும், சிறை வளாகத்துக்கு திடீரென்று சென்று கைதிகளின் அறைகளில் சோதனை நடத்துவது வழக்கம். இந்த நிலையில் மாநகர போலீஸ் கமிஷனர் மணிவண்ணன் உத்தரவின்பேரில் மாநகர கிழக்கு பகுதி போலீஸ் துணை கமிஷனர் வினோத் சாந்தாராம் மேற்பார்வையில் மேலப்பாளையம் உதவி கமிஷனர் கண்ணதாசன், பாளை உதவி கமிஷனர் சுரேஷ்குமார் ஆகியோர் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாளையங்கோட்டை மத்திய சிறையில் திடீரென்று சோதனை நடத்தினர்.

சிறை வளாகத்துக்குள் சென்று அங்குள்ள கைதிகளின் அறைகள், கைதிகள் பகல் நேரத்தில் நடமாடும் வளாகம், உணவு தயாரிக்கும் கூடம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அதிரடி சோதனை நடத்தினர். காலையில் தொடங்கி சுமார் 2 மணி நேரத்துக்கு மேலாக இந்த சோதனை நடைபெற்றது. ஆனால், சிறையில் எதுவும் சிக்கவில்லை என போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த சோதனை காரணமாக சிறையில் பரபரப்பு நிலவியது.

READ MORE ABOUT :